முதியவரிடம் வங்கி விவரங்களை பெற்று ரூ.50 ஆயிரம் மோசடி
வங்கி மேலாளர் என பேசி முதியவரிடம் வங்கி விவரங்களை பெற்று ரூ.50 ஆயிரம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்,
வங்கி மேலாளர் என பேசி முதியவரிடம் வங்கி விவரங்களை பெற்று ரூ.50 ஆயிரம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காலாவதி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஹனீபா (வயது82). இவரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் வங்கி மேலாளர் பேசுவதாக கூறி வங்கி ஏ.டி.எம். அட்டை காலாவதியாகி உள்ளதால் அதனை புதுப்பித்து வழங்க அழைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இதனால் ஹனீபா தான் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு ஏ.டி.எம். கார்டின் பின்புறம் உள்ள 13 இலக்க எண்ணை தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.
தானாக முன்வந்து வங்கி மேலாளர் உதவுவதாக எண்ணி மகிழ்ந்த முதியவர் உடனடியாக ஏ.டி.எம். கார்டினை எடுத்து அதன் பின்புறம் உள்ள எண்ணை தெரிவித்துள்ளார்.
விவரம்
உங்களின் விவரங்களை பரிசோதித்ததில் அனைத்தும் சரியாக உள்ளது. உங்களின் வங்கி ஏ.டி.எம். கார்டினை புதுப்பிக்க தொடங்கி உள்ளோம். தற்போது உங்கள் செல்போன் எண்ணிற்கு 4 இலக்க ரகசிய எண் வரும் அதனை பார்த்து தெரிவியுங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்களின் ஏ.டி.எம். கார்டினை புதுப்பித்து தருகிறேன் என்று கூறியுள்ளார். அவர் கூறியபடி செல்போன் எண்ணிற்கு வந்த ரகசிய எண்ணை தெரிவித்தபோது சரியாக சொன்னீர்கள் உங்களின் வேண்டுகோளை சில நிமிடங்களில் செயல்படுத்தி தருகிறேன் என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
தானாக முன்வந்து தனக்கு உதவிய வங்கி மேலாளருக்கு நன்றி தெரிவித்த ஹனீபா சில நொடிகளில் தனது செல் போனிற்கு வந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் 2 தவணையாக ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக வந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
புகார்
இதுகுறித்து ஹனீபா ராமநாதபுரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் ஆன்லைன் மூலம் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின் றனர்.
வங்கி ஏ.டி.எம். கார்டின் எண்களை யாருக்கும் தெரிவிக்கக்கூடாது என்று வங்கி நிர்வாகமும், காவல்துறையும் ஒவ்வொரு முறையும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இதுகுறித்து அறியாதவர்கள் இன்றளவும் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
Related Tags :
Next Story