பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்


பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்
x
தினத்தந்தி 22 Oct 2021 10:43 PM IST (Updated: 22 Oct 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது என்று விவசாயிகள் மற்றும் குடும்பத்தலைவிகள் கருத்து தெரிவித்தனர்.

காரைக்குடி, 
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது என்று விவசாயிகள் மற்றும் குடும்பத்தலைவிகள் கருத்து தெரிவித்தனர்.
விலையேற்றம்
தனலெட்சுமி (குடும்பத்தலைவி):- இன்றைய காலக்கட்டத்தில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி வருவது அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை இழக்கும் வகையில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் என்பது முக்கியமானது. இதை விலையேற்றினால் அனைத்து விலையும் உயரும். எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் கவனம் கொண்டு உடனடியாக விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுமுகம் (ஆட்டோ டிரைவர் காரைக்குடி):- டீசல், பெட்ரோல் என்பது அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக உள்ளது. இதை விலையேற்றம் செய்தால் குண்டூசி முதல்  அனைத்து பொருட்களின் விலையும் உயரும். ஏற்கனவே ஒரு பக்கம் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே போவதால் மக்கள் விழி பிதுங்கி உள்ளனர். தற்போது டீசல் விலையும் அதற்கு போட்டியாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் பெரிதும் பாதிக்கும்.
பரிசீலனை
தனம் (ஓட்டல் வைத்து நடத்துபவர்):- மத்திய அரசு தினந்தோறும் விலையேற்றம் செய்யும் பொருளாக பெட்ரோல், டீசலை வைத்துள்ளது. இதனால் பெரும் சுமை ஏழை, எளிய மக்கள் மீது விழுகிறது. இன்றைய கால கட்டத்தில் டீசல் விலையை ஏற்றினால் பஸ் டிக்கெட், போக்குவரத்து செலவு உள்ளிட்ட அனைத்திலும் விலையேற்றம் ஏற்படும். எனவே மத்திய அரசு இதை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்.
விவசாயி கணேசன் (பிரான்மலை):- மத்திய அரசு ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைப்போம் என கூறி வந்தனர். ஆனால் அதற்கு மாறாக தற்போது 3 மடங்காக விலையை ஏற்றி வருவது விவசாயி களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் உள்ளது. 
தற்போது டீசல் விலை ரூ.100 தாண்டி செல்கிறது. ஏற்கனவே விவசாயிகள் அதிக அளவில் டீசல் மோட்டார், டிராக்டர் உள்ளிட்டவைகளை வைத்து விவசாயம் செய்து வரும் வேளையில் டீசல் விலையை ஏற்றும்போது அனைத்து விவசாய பொருட்களின் விலையும் ஏறும். இதனால் விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story