விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக ஜெயச்சந்திரன் தேர்வு வி.சி.க. ஷீலாதேவி சேரன் துணைத்தலைவர் ஆனார்
விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஜெயச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் வி.சி.க.வை சேர்ந்த ஷீலா தேவி சேரன் துணைத்தலைவர் ஆனார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைபுக்களுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில், மொத்தம் உள்ள 28 மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவில், 26 இடங்களில் தி.மு.க.வும், ஒரு இடத்தில் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும், ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாவட்ட கவுன்சிலர்கள் 28 பேரும் கடந்த 20-ந் தேதியன்று பதவியேற்றுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து நேற்று தலைவர், துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் நடந்தது.
போட்டியின்றி தேர்வு
மாவட்ட கலெக்டர் டி.மோகன் முன்னிலையில் நடந்த இந்த தேர்தலில் 18-வது வார்டு தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக ஜெயச்சந்திரன் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, அவர், கலெக்டர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். அதேபோல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவராக 10-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஷீலாதேவி சேரன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட இருவருக்கும் மாவட்ட கவுன்சிலர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
உள்ளாட்சியில் நல்லாட்சி
அதன் பின்னர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளதால் உள்ளாட்சியில் அமோக வெற்றி பெற்றுள்ளோம்.
உள்ளாட்சியில் நல்லாட்சியை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் பணியாற்றுவோம். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் அடிப்படை வசதிகள் கிடைக்க மாவட்ட ஊராட்சிக்குழுவை சிறப்பாக செயல்படுத்துவேன் என்றார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story