மாவட்ட செய்திகள்

ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்:ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் தோல்விமறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் மீது போலீஸ் தடியடி + "||" + Police beat

ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்:ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் தோல்விமறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் மீது போலீஸ் தடியடி

ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்:ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் தோல்விமறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் மீது போலீஸ் தடியடி
ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் தோல்வியடைந்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் திண்டிவனம் அருகே சாரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் நாராயணமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. 

இந்த ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 வார்டுகளில் தி.மு.க.-7, அ.தி.மு.க.-3, பா.ம.க.-2, சுயேச்சைகள்-4 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தனர். 

தி.மு.க.-சுயேச்சை இடையே போட்டி

ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 8-வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம் போட்டியிட்டார். இவரை எதிர்த்து 15-வது வார்டு சுயேச்சை கவுன்சிலரான எழிலரசன் போட்டியிட்டார். 

பா.ம.க. மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் அலுவலகத்துக்கு வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனால் மறைமுக தேர்தல் தாமதமாக தொடங்கியது.  இருப்பினும், ஒரே ஒரு சுயேச்சை பெண் கவுன்சிலர் மட்டும் தனது வாக்கை செலுத்த நீண்ட நேரமாக வரவில்லை. இதையடுத்து, தேர்தல் அலுவலர் நாராயணமூர்த்தி வாக்குகள் எண்ணப்படுவதாக அறிவித்தார்.

கவுன்சிலருக்கு அனுமதி மறுப்பு

இந்த நிலையில் அந்த பெண் கவுன்சிலர் அங்கு வந்தார். ஆனால், அவருக்கு ஓட்டு போடுவதற்கு தேர்தல் அலுவலர் நாராயணமூர்த்தி அனுமதி அளிக்கவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. 


இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், தி.மு.க.வை சேர்ந்த சொக்கலிங்கம் 8 ஓட்டுகளையும், சுயேச்சையான எழிலரசன் 7 வாக்குகளையும் பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஒலக்கூர் ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றியது.

தீக்குளிக்க முயற்சி

சுயேச்சை வேட்பாளர் எழிலரசன் தோல்வி குறித்து அறிந்தவுடன், அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தலில் குளறுபடி நடந்துள்ளது. சுயேச்சை பெண் வேட்பாளரை ஏன் வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று கூறி மறியலை கைவிடவில்லை. 

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர், உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு, தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் அங்கு நிலைமை மேலும் பதற்றமானது.

போலீஸ் தடியடி

இதையடுத்து திண்டிவனம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 

அப்போது பெண்கள் உள்பட அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  ஸ்ரீநாதா அங்கு விரைந்து வந்து விசாரித்தார். 

துணைத்தலைவர் பதவி

இந்நிலையில் மதியத்துக்கு பிறகு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க.வில் இருந்து 13-வது வார்டில் வெற்றி பெற்ற ராஜாராம் என்பவர் மட்டுமே மனுதாக்கல் செய்து இருந்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.