கல்லூரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை


கல்லூரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 22 Oct 2021 11:56 PM IST (Updated: 22 Oct 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

முசிறி அருகே கூட்டுறவு சங்கமாநில தலைவருக்கு சொந்தமான கல்லூரிகளில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தனர். இதேபோல் லாலாபேட்டையில் உள்ள அவரது சகோதரி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

முசிறி, அக்.23-
முசிறி அருகே கூட்டுறவு சங்கமாநில தலைவருக்கு சொந்தமான கல்லூரிகளில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தனர். இதேபோல் லாலாபேட்டையில் உள்ள அவரது சகோதரி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
கூட்டுறவு சங்க தலைவர்
சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், மாநில கூட்டுறவு சங்க தலைவராகவும் பதவி வகித்து வருபவர் இளங்கோவன். இவர் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் ஆவார். இவருக்கு திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் எம்.ஐ.டி. வேளாண்மை பொறியியல் கல்லூரி, முசிறி - துறையூர் சாலையில் எம்.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் உள்ளன.
கல்லூரிகளில் சோதனை
இந்தநிலையில் இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து நேற்று காலையில் முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்துக்கு லஞ்சஒழிப்புதுறை போலீசார் திடீரென்று வந்தனர். அவர்கள் அங்குள்ள இளங்கோவனுக்கு சொந்தமான எம்.ஐ.டி. வேளாண்மை பொறியியல் கல்லூரியில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் முசிறி துறையூர் மெயின் ரோட்டில் உள்ள எம்.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அலுவலகங்கள், கல்லூரி அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
மகன் வீட்டிலும் சோதனை
இதேபோல் முசிறி ரேணுகாதேவி நகரில் உள்ள சுவாமி ஐயப்பன் அறக்கட்டளை அலுவலகம் மற்றும் அங்குள்ள இளங்கோவனின் மகன் பிரவீன் குமார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. காலை 7 மணி முதல் தொடங்கிய சோதனை இரவு வரை நடைபெற்றது. இந்த சோதனையில் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜு, மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர். ஆனால் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.
இந்த நிலையில் எம்.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரியில் சோதனை நடந்தபோது, திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களை தடு்த்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு  ஏற்பட்டது.
லாலாபேட்டை
இதேபோல் இளங்கோவனின் அக்காள் இந்திராணி தனது மகன் கிருஷ்ணமூர்த்தியுடன் கரூர் மாவட்டம் லாலாபேட்டை புது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அதிரடி சோதனை செய்தனர்.
இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.
லாலாபேட்டை பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story