மருத்துவ பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்ததால் 100 கோடி தடுப்பூசி சாதனை நிகழ்ந்தது
மருத்துவ பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்ததால் 100 கோடி தடுப்பூசி சாதனை நிகழ்ந்தது- பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன்
விருதுநகர்
மருத்துவ பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்ததால்
100 கோடி தடுப்பூசி சாதனை நிகழ்ந்தது என பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கூறினார்.
பாராட்டுக்கடிதம்
இந்தியாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட ஒத்துழைத்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தை டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களிடம் விருதுநகர் மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் வழங்கினார். விருதுநகர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணியிடம் பிரதமரின் பாராட்டுக் கடிதத்தை நேரடியாக வழங்கிய பேராசிரியர் சீனிவாசன் நாட்டு மக்களுக்கு தங்கள் சேவையை அர்ப்பணித்த செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செவிலியரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரலாற்றுச் சாதனை
பிரதமர் மோடி வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்திய மக்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்து சாதனை நிகழ்த்தியுள்ளார். உலக அளவில் இது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கப்படாமல் இருந்தால் உலக அளவில் தடுப்பூசியின் விலை அதிகமாக இருந்திருக்கும். தடுப்பூசி செலுத்துவதில் டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும் முன்கள பணியாளர்களாக இருந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்ததால் தான் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது. அதிலும் கொரோனா காலத்தில் சக பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயிரிழந்தாலும் தடுப்பூசி போடும் பணியில் இருந்து பின்வாங்காது அனைத்து பணியாளர்களும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டதை தேச வேள்வியாக கருத வேண்டியுள்ளது.
சான்றிதழ்
பிரதமர் மோடி தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்திய மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி, பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கியுள்ளார். அந்த சான்றிதழை தமிழகத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் டாக்டர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணிக்கு முதல் சான்றிதழை வழங்கி உள்ளேன்.
இதைதொடர்ந்து மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும் சான்றிதழை வழங்க உள்ளேன். கொரோனா காலத்தில் தன்னலம் கருதாது களப்பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்களின் சேவை என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
Related Tags :
Next Story