வீடுகளில் பட்டாசு தயாரித்த 4 பேர் கைது
வீடுகளில் பட்டாசு தயாரித்த 4 பேர் கைது
தாயில்பட்டி
வெம்பக்கோட்டை அருகே வீடுகளில் பட்டாசு தயாரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால் சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை பகுதிகளில் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் தொழிலும் ஒரு பக்கம் மும்முரமாக நடப்பதாக கூறப்படுகிறது. இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் வெம்பக்கோட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுச்சாமி, ராமமூர்த்தி, ஜவகர் ஆகியோர் தலைமையில் தாயில்பட்டி, கோட்டையூர், பசும்பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கோட்டையூரை சேர்ந்த தங்கம்(வயது 50), முனீஸ்வரன்(52), பசும்பொன் நகரை சேர்ந்த முனீஸ்வரன்(42), கண்ணன்(40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து தலா 2 கிலோ சரவெடிகளை வெம்பக்கோட்டை போலீசார் கைப்பற்றினார்கள்.
Related Tags :
Next Story