விவசாயியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை


விவசாயியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 23 Oct 2021 12:55 AM IST (Updated: 23 Oct 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

விவசாயியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சி, அக்.23-
விவசாயியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
முன்விரோதம்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா போசம்பட்டி வியாழன்மேடு பகுதியை சேர்ந்தவர் மணியன். இவருடைய மகன் கோவிந்தராஜ் (வயது 40), விவசாயி. மணியனின் தம்பி சிங்காரத்தின் மகன் கார்த்திகேயன் (வயது 34).
 இவர்கள் இருவருக்கும் இடையே பொதுப்பாதை பிரச்சினை தொடர்பாக சில ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி காலை கார்த்திகேயனுக்கும், மணியனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
3 பேருக்கு கத்திக்குத்து
இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் கத்தியால் மணியனின் கையில் குத்தினார். இதை கண்டு மணியனின் மகன் கோவிந்தராஜ்  ஓடி வந்தார். அப்போது அவரையும் கார்த்திகேயன் 3 முறை கத்தியால் வயிற்றில் குத்தினார். பின்னர் கோவிந்தராஜின் தங்கை போதும்பொண்ணுவையும் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் இதில் கோவிந்தராஜ் இறந்தார். இந்த சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திகேயனை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு திருச்சியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி ஜெயக்குமார் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகேயனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபராதமும் விதித்து இருந்தார்.

Next Story