மீனவர் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்படாததால் உண்ணாவிரதம் நீடிப்பு


மீனவர் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்படாததால் உண்ணாவிரதம் நீடிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2021 12:56 AM IST (Updated: 23 Oct 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான மீனவர் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்படாததால் 3-வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்கிரண்(வயது 30), சுகந்தன்(23), சேவியர் (32) ஆகிய 3 பேரும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் விசைப்படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், படகு கடலுக்குள் மூழ்கியது. இதில், மற்ற 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ராஜ்கிரண் பிணமாக மீட்கப்பட்டார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், உயிரிழந்த ராஜ்கிரண் உடலை சொந்த ஊர் கொண்டு வரக்கோரியும், அவரது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் வழங்கக்கோரியும் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3-வது நாளாக உண்ணாவிரதம்
இன்று(அதாவது நேற்று) மீனவர் ராஜ்கிரண் உடலை இலங்கை அரசு, இந்திய கப்பல் படையிடம் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளில் கடலுக்குள் சென்று உடலை பெற காத்திருந்தனர். ஆனால், நேற்றும் ராஜ்கிரண் உடல் ஒப்படைக்கப்படவில்லை. இதனால், அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் கடலில் இருந்து கரை திரும்பினர்.
 இதன் காரணமாக 3-வது நாளாக மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் நீடித்தது. மீனவர்களது போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நேற்று பா.ஜ.க. மாநில மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார், மாநில மகளிர் அணி செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரிப், மே-17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் தங்களது ஆதரவு தெரிவித்தனர்.
கடலில் இறங்கி போராட முயற்சி
மீனவர் ராஜ்கிரண் உடல் நேற்றும் ஒப்படைக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த மீனவர்கள் மற்றும் மே-17 இயக்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமாகினர்.அவர்களை போலீசார் மீன்பிடி தளத்தில் தடுத்து நிறுத்தி கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இந்தநிலையில் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக சங்கத்தினர் தங்களது கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, மாதர் சங்கத்தினரும் மீனவர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
மீனவர் ராஜ்கிரண் உடல் எப்போது சொந்த ஊர் கொண்டு வரப்படும் என்று கலெக்டர் கவிதா ராமுவிடம் கேட்டபோது, அரசு மற்றும் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Next Story