தந்தை-மகனுக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது


தந்தை-மகனுக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2021 12:58 AM IST (Updated: 23 Oct 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

தந்தை-மகனை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி, அக்.23-
தந்தை-மகனை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கத்திக்குத்து
திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டையை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 52). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த கிருபாகரனுக்கும் (22) இடையே முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் இரவு மேட்டுதெரு ரேஷன்கடை அருகே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஸ்டாலினையும், அவரது மகன் லிங்கனையும் கிருபாகரன் கத்தியால் குத்தினார். இதையடுத்து இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து கிருபாகரனை கைது செய்தனர்.
முதியவர் தற்கொலை
திருச்சி மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (65). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெரியகடை வீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர் வேலையை இழந்தார். அதன்பின்னர் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்தசோமசுந்தரம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர் மாயம்
*மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி அண்ணா நகரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி- ரேவதி தம்பதியின் மகன் கருப்பசாமி (17). இவர் துறையூரில் கரட்டாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து ரேவதி மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மாயமான கருப்பசாமியை தேடி வருகின்றனர்.
ரூ.50 ஆயிரம் திருட்டு
*முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் அரிசி ஆலை நடத்தி வருபவர் செல்வம். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஆலையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலையில் ஆலையை திறந்து உள்ளே சென்றபோது, ஆலையின் மேற்கூரை பிரிக்கப்பட்டும், பீரோ திறந்து கிடந்தையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*முசிறி அருகே உள்ள திண்ணகோணம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் விக்னேஷ் (24). நேற்று முன்தினம் திருச்சிக்கு கூலி வேலைக்கு சென்ற இவர் இரவு மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் தூங்கியுள்ளனார். இந்த நிலையில். நேற்று காலை விக்னேஷ் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*வேலூர் மாவட்டம் கமலாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (59). இவர் குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்துக்கு வந்தார். அங்கு உடமைகளை படிக்கட்டில் வைத்து விட்டு காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது, அவர்களது 3 செல்போன்களை திருடிய சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சரவணன் (43) என்பவரை கையும், களவுமாக பிடித்து ஸ்ரீரங்கம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்தனர்.
மணல் கடத்தல்
*ஸ்ரீரங்கம் தாகூர்தெருவில் நேற்று முன்தினம் பகல் ஸ்ரீரங்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தி வந்த டிப்பர்லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதேபகுதியை சேர்ந்த கருணா, சீனி, செல்வம் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
*திருச்சி-திண்டுக்கல் மெயின்ரோட்டில் காவேரிநகர் விரிவாக்கம் கொல்லாங்குளத்தில் நேற்று முன்தினம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதை கண்ட அந்த பகுதியினர் எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் எனவும், குளத்தில் குளித்து கொண்டு இருந்தபோது, தவறி விழுந்து இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story