மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Milk producers protest in front of the Collector's Office

கலெக்டர் அலுவலகம் முன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கலெக்டர் அலுவலகம் முன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கலெக்டர் அலுவலகம் முன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:

192 சங்கங்கள்
தமிழகத்தில் சின்ன வெங்காயம் உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இதற்கு அடுத்து மக்காச்சோளம் போன்றவை அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் பால் உற்பத்தியிலும் பெரம்பலூர் மாவட்டம் தன்னிறைவு பெற்று திகழ்கிறது. மாவட்டத்தில் தற்போது 192 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட சங்கங்களில் சுமார் 21 ஆயிரம் பேர் உறுப்பினர்களாகி பால் ஊற்றி வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் பால் மாவட்டத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, உள்ளூர் விற்பனை போக, மீதமுள்ள பால் பெரம்பலூர் பால் குளிரூட்டும் நிலையத்துக்கும், பாடாலூர் பால் பண்ணைக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
சங்கங்கள் மூலம் உறுப்பினர்களான பால் உற்பத்தியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறையும் மற்றும் மாதம் ஒரு முறையும், பிரதிமாதம் 5-ந் தேதிக்குள்ளும் கொள்முதல் செய்த பாலுக்கு பணம் பட்டு வாடா செய்யப்பட்டு வந்தது. தற்போது 80 நாட்களுக்கு மேலாகியும் கொள்முதல் செய்த பாலுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கூட்டுறவு சங்கங்கள் நிலுவை தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே பால் உற்பத்தியாளர்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கும், திருச்சி மாவட்ட ஆவின் ஒன்றியத்துக்கும் மனு கொடுத்திருந்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆர்ப்பாட்டம்
இதனால் திட்டமிட்டபடி பெரம்பலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு நிலுவை தொகையை வழங்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஞானசேகரன், செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முகம்மது அலி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் மாசிலாமணி ஆகியோர் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட பால் உற்பத்தியாளர்கள் நிலுவைத்தொகையை கூட்டுறவு சங்கங்கள் உடனடியாக வழங்குவதற்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 நாட்களுக்கு ஒருமுறை ஆவின் நிர்வாகத்திடம் இருந்து சங்கங்களுக்கு உடனுக்குடன் பாலுக்கான பணம் வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.5-ம், எருமைப்பாலுக்கு ரூ.10-ம் உயர்த்தி கொடுக்க வேண்டும். பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மாட்டுத்தீவனத்தை மானிய விலையில் வழங்கிட வேண்டும். அனைத்து பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு மானியத்தில் காப்பீடு செய்ய வேண்டும். திருச்சி மாவட்ட ஆவின் ஒன்றியத்தில் இருந்து பிரித்து பெரம்பலூர் மாவட்டத்தை தனி ஒன்றியமாக அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
கலெக்டரிடம் மனு
ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டமைப்பு, விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சென்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து கோரிக்கை தொடர்பான மனுவை அளித்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடந்த பால் உற்பத்தியாளர்களின் ஆர்ப்பாட்டத்தால், அந்தப்பகுதியில் காலை முதல் மதியம் வரை பரபரப்பாகவே காணப்பட்டது.
தீவனம் வாங்க வழியில்லை
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பால் உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், 80 நாட்களுக்கு மேலாகியும் பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு பணம் பட்டுவாடா செய்யாததால் பால் உற்பத்தியாளர்கள் வருமானமின்றி, தங்களது கால்நடைகளுக்கு தீவனம் கூட வாங்க வழியில்லாமல் தவித்து வருகின்றனர். பால் பணத்தை நம்பியே பால் உற்பத்தியாளர்கள் பலர் குடும்பம் நடத்தி வருகின்றனர். இதனால் தீபாவளி பண்டிகையையும் கொண்டாட முடியாத நிலை ஏற்படும் என்று தெரிகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பால் நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீல் மல்க தெரிவித்தனர்.
சாலை மறியல்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பால் உற்பத்தியாளர்கள் சரக்கு வாகனங்கள் மூலம் வந்தனர். அவர்கள் பெரம்பலூர் நகருக்குள் நுழைந்தபோது போக்குவரத்து போலீசார் சரக்கு வாகனங்களில் பயணம் செய்ததற்காக அபராதம் விதித்தனர். அரசியல் கட்சியினர் நடத்தும் கூட்டங்களுக்கு சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்சென்றால் போலீசார் கண்டுகொள்வதில்லை. ஆனால் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பால் நிலுவை தொகையை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட சரக்கு வாகனங்களில் சென்ற தங்களுக்கு அபராதம் விதித்த போலீசாரை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் பலர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பால் உற்பத்தியாளர்கள் மறியலை கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்றனர்.
தமிழகம் முழுவதும் போராட்டம்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகம்மது அலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் வழங்கப்படாமல் உள்ள நிலுவை தொகையை பால் உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும், என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கீரனூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லக்கோரி உண்ணாவிரதம்
கீரனூர் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் ரெயில் நிலையத்தில் நின்று செல்லக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
2. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துணைத்தலைவர் உள்ளிருப்பு போராட்டம்
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துணைத்தலைவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
3. உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்
விருதுநகர் அருேக செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நாற்று நடும் போராட்டம்
சாலையை சீரமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நாற்று நடும் போராட்டம்
5. மருத்துவ பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
மருத்துவ பணியாளர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.