3 ஊராட்சிகளில் துணைத்தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
3 ஊராட்சிகளில் துணைத்தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்:
மறைமுக தேர்தல்
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இறப்பு காரணமாக 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த 3 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்களுக்கும், 9 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் கடந்த 9-ந்தேதி தற்செயல் தேர்தல் நடந்தது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 20-ந்தேதி பதவி ஏற்று கொண்டனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆடுதுறை ஊராட்சி மன்றத்திலும், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒட்டக்கோவில், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுகடம்பூர், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட உட்கோட்டை ஆகிய ஊராட்சி மன்றங்களில் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று காலையில் நடைபெறுவதாக இருந்தது.
போட்டியின்றி தேர்வு
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடுதுறை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு 2-வது வார்டு உறுப்பினர் ராஜேந்திரன் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், ஆடுதுறை ஊராட்சி மன்ற துணைத் தலைவராக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் ஒட்டக்கோவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக 3-வது வார்டு உறுப்பினர் செல்வி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஏற்கனவே வார்டு உறுப்பினராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சிறுகடம்பூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக 3-வது வார்டு உறுப்பினர் லெனின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தற்போது நடந்த வார்டு உறுப்பினர் பதவிக்கான தற்செயல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.
2 பேர் போட்டி
உட்கோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு, தற்போது நடந்த தற்செயல் தேர்தலில் 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கடேஸ்வரனும், 4-வது வார்டு உறுப்பினரான கலைவாணனும் போட்டியிட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட மறைமுக தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த ஊராட்சி மன்ற தலைவர், 12 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 13 பேரில், ஊராட்சி மன்ற தலைவர், 11 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 12 பேர் வாக்களித்தனர். இதில் 8 வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற வெங்கடேஸ்வரன் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கலைவாணனுக்கு 4 வாக்குகள் கிடைத்தன. மறைமுக தேர்தல் நடைபெற்ற உட்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story