குழந்தையை கடத்திய 2 பேர் கைது
கும்பகோணத்தில் குழந்தையை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கும்பகோணம்;
கும்பகோணத்தில், குழந்தையை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தை மாயம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனாம்படுகையை சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மனைவி நாகம்மாள். இவர்கள் கும்பகோணத்தில் சாலையோரம் குடிசை அமைத்து குடியிருந்து வருகிறார்கள்.
இவர்களுடைய 11 மாத ஆண் குழந்தை முகமது சுலைமான், கடந்த 15-ந் தேதி திடீரென்று மாயமானது. தங்களது குழந்தையை காணாமல் அதிர்ச்சி அடைந்த ஆனந்த்-நாகம்மாள் தம்பதியினர் இது குறித்து பட்டீஸ்வரம் போலீசில் புகார் அளித்தனர்.
தீவிர தேடுதல் வேட்டை
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்றது தெரிய வந்தது. மேலும் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை கைது செய்ய கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மேற்பார்வையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தனிப்படை போலீசார் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் தீவிர தடுதல் வேட்டை மற்றும் விசாரணையில் கும்பகோணத்தில் இருந்து குழந்தையை கடத்தி சென்றது நாகர்கோவிலை சேர்ந்த மிக்கேல் மற்றும் மதுரையை சேர்ந்த ஆறுமுகம் என்பதும், இவர்கள் குழந்தையுடன் தாராசுரம் பஸ் நிலையத்தில் நிற்பதும் தெரிய வந்தது.
கைது-குழந்தை மீட்பு
இதனைத்தொடர்ந்து தாராசுரத்துக்கு சென்ற தனிப்படை போலீசார் மிக்கேல, மற்றும் ஆறுமுகத்தை பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டனர். குழந்தை கடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து மிக்கேல் மற்றும் ஆறுமுகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் அளிக்கும் தகவலை பொருத்தே குழந்தை கடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட குழந்தை ஆனந்த்-நாகம்மாள் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. 7 நாட்களுக்கு பின்பு தங்கள் குழந்தையை கண்ட அவர்கள் கண்ணீர்மல்க குழந்தையை பெற்றுக்கொண்டனர்.
Related Tags :
Next Story