கொடிமரத்திற்கு உடனே கவசம் பொருத்த வேண்டும்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கொடிமரத்திற்கு உடனே கவசம் பொருத்த வேண்டும் என்று 2-வது நாளில் நடந்த பிரசன்னத்தில் கூறப்பட்டது.
திருவட்டார்,
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கொடிமரத்திற்கு உடனே கவசம் பொருத்த வேண்டும் என்று 2-வது நாளில் நடந்த பிரசன்னத்தில் கூறப்பட்டது.
2-வது நாள் பிரசன்னம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று 2-வது நாளாக தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் நடந்த தேவ பிரசன்னத்தில் கூறியபடி கும்பாபிஷேகம் விரைவில் நடத்துவதற்காக தந்திரி சஜித் சங்கர நாராயணரு மிருத்துஞ்சய ஹோமம் நடத்தினார்.
தொடர்ந்து சோழி உருட்டி தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது வாசுதேவன் பட்டத்திரி ஜோதிடர்களுடன் ஆலோசித்து கூறியதாவது:-
கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்ற காலம் இதுதான். கடு சர்க்கரை யோக சிலை சிறப்பாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. பகவானின் அருள் இந்த ஊரில் எல்லோருக்கும் கிடைக்க ஊர் மக்களின் ஒத்துழைப்பும் அதிகம் தேவை. நாட்டு மக்களும் பிரிந்து உள்ளனர். நம்பி நியமிக்கப்பட வேண்டும். இப்போது உள்ள மேல் சாந்தி ஆற்றில் குளிக்காமல் வீட்டில் குளித்து வருகிறார். இது தவறு. அவர் ஆற்றில் சென்று குளித்து விட்டு கோவிலுக்கு வர வசதியாக கோவில் முன்புறம் ஓடும் ஆற்றின் படித்துறை சரி செய்யப்பட வேண்டும்.
கும்பாபிஷேகம்
கோவிலில் நடக்கும் அனைத்து பூஜைகளும் தந்திரி அறிந்தே நடத்தப்பட வேண்டும். ஆனால் இங்கு தந்திரியிடம் தகவல் அளிப்பதே இல்லை. இது தவிர்க்கப்பட வேண்டும். போதிய பணியாட்கள் இல்லாத குறை உள்ளது. கொடிமரம் பிரதிஷ்டை செய்து இன்னும் அதற்கு கவசம் போடாமல் இருப்பதால் கொடிமரம் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே உடனே கொடி மரகவச வேலைகளை தொடங்குவது நல்லது.
அது போல் பாலாலயத்தில் அதிக நாட்கள் பகவானை வைத்திருக்கக் கூடாது. எனவே விரைந்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஏற்கனவே திருட்டு நடந்துள்ளது. கவனமின்றி இருந்தால் 3-வது முறையும் இவ்வாறு விரும்பத்தகாத சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. கோவிலை சுற்றியுள்ள 12 கோவில்களில் 6 சிதிலமடைந்தும், 6 ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது. அவை மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு பூஜைகள் முறைப்படி நடத்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டது.
2-வது நாளான நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்படும் தேதி தேர்வு செய்வதாக நேற்று முன்தினம் கூறப்பட்டது. பரிகாரங்கள், பூஜைகள் குறித்த விஷயங்கள் பற்றி நேற்று பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதனால் இன்று (சனிக்கிழமை) நடக்கும் தேவ பிரசன்னத்தில் கும்பாபிஷேக நாள் தேர்வு செய்யப்படும் என வாசுதேவன் பட்டத்திரி தெரிவித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story