இளங்கோவன் வீடு உள்பட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
இளங்கோவன் வீடு உள்பட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சேலம், அக்.23-
மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனின் வீடு உள்பட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
மாநில கூட்டுறவு வங்கி தலைவர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது ஊழல் செய்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி மற்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது தனித்தனியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களுடைய வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள புத்திரகவுண்டன் பாளையத்தில் வசித்து வருபவர் இளங்கோவன் (வயது57). இவர் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார். மேலும் அவர் அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பேரவையின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இதுமட்டுமின்றி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் ஆவார்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் இளங்கோவன் மற்றும் அவருடைய மகன் பிரவீன்குமார் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை வருமானத்தைவிட 131 சதவீத சொத்துகள் அதிகமாக சேர்த்துள்ளது தெரியவந்தது. அதாவது, அவர்கள் ரூ.3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755-க்கு சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் சோதனை
இதைத்தொடர்ந்து மாநில தலைமை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனின் வீடு, தோட்டத்து வீடு, அலுவலகம், உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்கள் என சேலம் மாவட்டத்தில் 17 இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.
அதன்படி, புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீட்டுக்கு நேற்று காலை 6 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் போலீசார் சென்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவதற்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்ததும் சென்னையில் இருந்து உடனடியாக இளங்கோவன் சேலம் விரைந்து வந்தார்.
பின்னர் அவருடைய வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த அனைத்து அறைகள் உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். சோதனையின் போது வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் வெளியில் இருந்தும் வீட்டுக்குள் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் சில ஆவணங்கள் குறித்து வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மாமனார், அக்காள் வீடுகள்
மேலும் இளங்கோவனின் தோட்டத்து வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை பற்றிய தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனி குழுவாக பிரிந்து புத்திரகவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள இளங்கோவனின் மாமனார் சாம்பமூர்த்தி, அவருடைய அக்காள் ராஜகுமாரி மற்றும் நண்பர்களான வரதராஜனின் நகைக்கடை மற்றும் எலக்ட்ரிக்கல் கடை, ஜெயராமன் என்பவருடைய வீடு உள்ளிட்ட இடங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர், வாழப்பாடி...
ஆத்தூர் கடைவீதி ராமர் தெருவில் ஆத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் மோகன் என்பவரது வீடு உள்ளது. இளங்கோவனின் நெருங்கிய நண்பரான இவருடைய வீட்டில் நேற்று காலை 6.30 மணி முதல் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மெல்வின் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல் அதே பகுதியில் உள்ள மோகனின் தங்கையும் அரசு பள்ளி ஆசிரியையுமான உமா சங்கரி என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பைத்தூர் ரோட்டில் உள்ள இளங்கோவனின் நண்பரான சதாசிவத்தின் வீடு மற்றும் சேகோ அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இளங்கோவனின் நண்பரான வாழப்பாடியை சேர்ந்த சேலம் மாவட்ட வேளாண்மை விற்பனை குழு துணைத்தலைவரும், ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளருமான குபேந்திரனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நகைக்கடையிலும் வேலூரை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
ஆடிட்டர்
அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜராஜ சோழன். இவர் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக உள்ளார். அவருடைய மனைவி தில்லைக்கரசி மாவட்ட கவுன்சிலராக உள்ளார். ராஜராஜ சோழன், மாநில தலைமை கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவனின் ஆதரவாளர் ஆவார். இதனால் ராஜராஜ சோழன் வீட்டிலும் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம் மரவனேரியில் உள்ள இளங்கோவனின் ஆடிட்டர் ஜெயபிரகாஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள இளங்கோவனுக்கு தொடர்புடைய 36 இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
தம்மம்பட்டி
இதே போல இளங்கோவனின் நண்பரான தம்மம்பட்டி அ.தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீகுமரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று காலை 6 மணி முதல் மாலை 4.15 மணி வரை சோதனை நடத்தினர். இந்த சோதனை அரியலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையில் நடந்தது. மேலும் அங்கு அ.தி.மு.க.வினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story