வாக்காளர்களை, காங்கிரஸ் தலைவர்கள் அவமதித்துவிட்டனர்; எடியூரப்பா பேச்சு
ஓட்டுக்கு பா.ஜனதா பணம் வழங்குவதாக கூறிய விஷயத்தில் வாக்காளர்களை காங்கிரஸ் தலைவர்கள் அவமதித்துவிட்டதாக எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு: ஓட்டுக்கு பா.ஜனதா பணம் வழங்குவதாக கூறிய விஷயத்தில் வாக்காளர்களை காங்கிரஸ் தலைவர்கள் அவமதித்துவிட்டதாக எடியூரப்பா கூறினார்.
மக்களை காப்பாற்ற தடுப்பூசி
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் வருகிற 30-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அந்த தொகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஹனகல் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனை ஆகும். ஆனால் எதிர்க்கட்சிகள் மட்டும் இதை குறை கூறுகின்றன.
எங்களுக்கு சாதி தெரியாது
மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை பா.ஜனதா கட்சியினர் செய்ய வேண்டும். எங்களுக்கு சாதி பற்றி தெரியாது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்பது தான் பா.ஜனதாவின் விருப்பம். இன்னும் 50 ஆண்டு காலம் காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை. அதனால் காங்கிரசார் பா.ஜனதாவில் சேர்ந்தால் அவர்களுக்கு நல்லது.
சாக்கு பைகளில் பணத்தை நிரப்பி கொண்டு வாக்காளர்களுக்கு கொடுப்பதாக பா.ஜனதா மீது காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது வெட்கக்கேடானது. வாக்காளர்களை காங்கிரஸ் தலைவர்கள் அவமதித்துவிட்டனர். காங்கிரஸ் கட்சி தான் சாதி, பணத்தை வைத்து அரசியல் செய்தது. அந்த கலாசாரத்தை தொடங்கியதே காங்கிரஸ் கட்சி தான்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
Related Tags :
Next Story