தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக தமிழ்ச்செல்வி தேர்வு


தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக தமிழ்ச்செல்வி தேர்வு
x
தினத்தந்தி 23 Oct 2021 4:57 AM IST (Updated: 23 Oct 2021 4:57 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக தமிழ்ச்செல்வி வெற்றி பெற்றார். துணைத்தலைவராக உதயகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

தென்காசி:
ஊரக உள்ளாட்சி தேர்தலில், தென்காசி மாவட்டத்தில் உள்ள 14 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் 10 பேரும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 3 பேரும், ம.தி.மு.க. வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணை தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல், தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சுரேஷ், மகளிர் திட்ட அலுவலர் குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 14 உறுப்பினர்களில் ராஜா தலைவர் என்ற உறுப்பினர் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

இதில் தி.மு.க.வைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, கனிமொழி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தமிழ்ச்செல்விக்கு 8 வாக்குகளும், கனிமொழிக்கு 5 வாக்குகளும் கிடைத்தன. இதன்மூலம் தமிழ்ச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் மதியம் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உதய கிருஷ்ணன் தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரலீலா ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 14 உறுப்பினர்களில் ராஜா தலைவர், கனிமொழி ஆகியோர் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. மீதமுள்ள 12 வாக்குகளில் 9 வாக்குகள் உதய கிருஷ்ணனுக்கும், 3 வாக்குகள் சந்திரலீலாவுக்கும் கிடைத்தன. எனவே உதயகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வெற்றி பெற்ற தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து வெளியே வந்த தலைவர் மற்றும் துணைத் தலைவரை பழனி நாடார் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் பாராட்டினர். அவர்களுக்கு தலைவி தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் உதய கிருஷ்ணன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இருவருக்கும் சால்வைகள் அணிவித்து வாழ்த்தினர்.

Next Story