நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவராக வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் போட்டியின்றி தேர்வு
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவராக வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6-ந்தேதி மற்றும் 9-ந்தேதி என 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 12-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் உள்ள 12 கவுன்சிலர்கள் பதவிகளில் 11 இடங்களை தி.மு.க.வும், ஓரிடத்தை காங்கிரஸ் கட்சியும் கைப்பற்றின.
இதைத்தொடர்ந்து இந்த 12 கவுன்சிலர்களில் இருந்து தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.
கலெக்டர் விஷ்ணு முன்னிலையில், மாவட்ட திட்ட இயக்குனர் பழனி தேர்தலை நடத்தினார். காலை 10 மணிக்கு தலைவர் பதவிக்கான வேட்பு மனு தொடங்கியது. இதில் தி.மு.க.வை சேர்ந்த 12-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். மற்ற கவுன்சிலர்களும் இவருடைய பெயரை மட்டும் முன்மொழிந்தனர்.
இதையடுத்து அவர் போட்டியின்றி தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
பிற்பகல் 2.30 மணிக்கு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது தி.மு.க.வை சேர்ந்த 1-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் செல்வலட்சுமி அமிதாப் வேட்புமனு தாக்கல் செய்தார். மற்ற கவுன்சிலர்களும் இவரது பெயரை முன்மொழிந்தனர். இதையடுத்து செல்வலட்சுமி துணைத்தலைவராக வெற்றி பெற்றார். அதற்கான சான்று உடனடியாக வழங்கப்பட்டது.
இதையடுத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், துணைத்தலைவர் செல்வலட்சுமி ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். பின்னர் அவர்களுடன் மாவட்ட கவுன்சிலர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Related Tags :
Next Story