தென்காசி மாவட்டத்தில் 9 யூனியன் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது


தென்காசி மாவட்டத்தில் 9 யூனியன் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 23 Oct 2021 5:43 AM IST (Updated: 23 Oct 2021 12:51 PM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 யூனியன்களில் 9-ல் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. குருவிகுளம் யூனியனில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9-ந்தேதிகளில் இருகட்டங்களாக நடைபெற்றது. கடந்த 12-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தி.மு.க. வேட்பாளர்கள் பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் 10 யூனியன்களிலும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. அந்தந்த யூனியன் அலுவலக கூட்டரங்குகளில் காலை 10 மணிக்கு தலைவர் பதவிக்கான தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 

பெரும்பாலான யூனியன்களில் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 யூனியன்களில் தென்காசி, செங்கோட்டை, கடையம், ஆலங்குளம், கீழப்பாவூர், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர் ஆகிய 9 யூனியன்களில் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. குருவிகுளம் யூனியனில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது.

தென்காசி யூனியன் தலைவராக ஷேக் அப்துல்லா, துணை தலைவராக கனகராஜ் முத்துப்பாண்டியன், செங்கோட்டை யூனியன் தலைவராக திருமலைச்செல்வி, துணை தலைவராக கலா, ஆலங்குளம் யூனியன் தலைவராக திவ்யா மணிகண்டன், துணை தலைவராக செல்வக்கொடி, கடையம் யூனியன் தலைவராக செல்லம்மாள் முருேகசன், துணை தலைவராக மகேஷ் மாயவன், கீழப்பாவூர் யூனியன் தலைவராக காவேரி, துணை தலைவராக முத்துக்குமார் (காங்கிரஸ்), கடையநல்லூர் யூனியன் தலைவராக சுப்பம்மாள், துணை தலைவராக ஐவேந்திரன் தினேஷ், வாசுதேவநல்லூர் யூனியன் தலைவராக பொன்.முத்தையா பாண்டியன், துைண தலைவராக சந்திரமோகன், சங்கரன்கோவில் யூனியன் தலைவராக சங்கர பாண்டியன், துணை தலைவராக செல்வி ஆகியோர் வெற்றி பெற்றனர். 

மேலநீலிதநல்லூர் யூனியன் தலைவராக மாதவி வெற்றி பெற்றார். துணை தலைவர் தேர்தலில் வாக்களிக்க போதிய உறுப்பினர்கள் வராததால் அந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. குருவிகுளம் யூனியன் தலைவராக விஜயலட்சுமி கனகராஜ் (ம.தி.மு.க.), துணை தலைவராக முருகேஸ்வரி கோட்டியப்பன் (காங்கிரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆலங்குளம் யூனியன் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திவ்யா மணிகண்டன் 13-வது வார்டு கவுன்சிலர் ஆவார். அவருக்கு அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில், பழனி நாடார் எம்.எல்.ஏ. முன்னிலையில் மேளதாளம், கரகாட்டம், சிலம்பாட்டத்துடன் திவ்யா மணிகண்டன் ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் அவர் கூறுகையில், “ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் தேவைக்கு முன்னுரிமை கொடுப்பேன். ஊராட்சிகளுக்கு வரும் நிதியை பாகுபாடின்றி அளித்து கிராமங்கள் வளம் பெற உழைப்பேன். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே சிறந்த ஊராட்சி ஒன்றியத்திற்கான விருதை பெற்று தருவேன் என்பதில் உறுதியாக உள்ளேன்” என்றார்.

வெற்றி பெற்ற யூனியன் தலைவர்கள், துணை தலைவர்கள் அந்தந்த யூனியன் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர். தலைவர், துணை தலைவர் தேர்தலையொட்டி யூனியன் அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வெற்றி பெற்ற தலைவர், துணை தலைவர்களுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story