சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சிக்கின-அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை
பென்னாகரம் பகுதியில் சாலையோரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறக்கும் படை குழுவினர் நடத்திய சோதனையின் போது சிக்கின. இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:
பென்னாகரம் பகுதியில் சாலையோரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறக்கும் படை குழுவினர் நடத்திய சோதனையின் போது சிக்கின. இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரேஷன் அரிசி பதுக்கல்
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உரிய கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார். இதன்படி மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம் தாலுகா பகுதிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன், பறக்கும் படை துணை தாசில்தார் குப்புசாமி மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் பென்னாகரம் பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பென்னாகரம் பகுதியில் சாலையோரம் மற்றும் முள்புதர்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் சிக்கின.
ஒப்படைப்பு
அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படை குழுவினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது 65 மூட்டைகளில் சுமார் 3 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் குழுவினர் கைப்பற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து சாலையோரத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்த விசாரணை தொடங்கப்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story