வேங்கிக்கால் ஏரி நிரம்பி வெளியேறிய தண்ணீரால் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்


வேங்கிக்கால் ஏரி நிரம்பி வெளியேறிய தண்ணீரால் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்
x
தினத்தந்தி 23 Oct 2021 6:08 PM IST (Updated: 23 Oct 2021 6:08 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரி நிரம்பி வெளியேறிய தண்ணீரால் வேலூர் பிரதான சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரி நிரம்பி வெளியேறிய தண்ணீரால் வேலூர் பிரதான சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து கால்வாய்களை அகலப்படுத்தும் பணி கலெக்டர் மேற்பார்வையில் நடைெபற்று போர்க்கால நடவடிக்கையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

வேங்கிக்கால் ஏரி

திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கிக்கால் ஊராட்சியில் கலெக்டர் அலுவலகம் எதிரில் வேங்கிக்கால் ஏரி உள்ளது. 

100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி சமீப காலமாக அவ்வப்போது பெய்து வரும் மழையினால் சுமார்  கடந்த வாரத்தில் முழு கொள்ளளவையும் எட்டி உபரி நீர் வெளியேற தொடங்கியது. 

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. 

இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. வேங்கிக்கால் ஏரிக்கும் அதிகளவில் நீர்வரத்து ஏற்பட்டு ஏரி நிரம்பி அதிலிருந்து தண்ணீர்  வெள்ளம்போல் வெளியேறியது. 

அவ்வாறு வெளியேறிய தண்ணீர் திருவண்ணாமலை- வேலூர் நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. 

தொடர்ந்து ஏற்பட்ட நீர்வரத்தால் ஏரிக்கு எதிரில் உள்ள குறிஞ்சி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகுள்ளும் தண்ணீர் சாலையில் இருந்து பெருக்கெடுத்து ஓடியது. 

இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். 
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு வேங்கிக்கால் ஏரி நிரம்பி உபரி நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தீவிர பணி

மேலும் அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி தலைமையிலான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி கால்வாய்கள் வழியாக அவலூர்பேட்டை சாலையில் உள்ள சேரியந்தல் ஏரிக்கு தண்ணீர் சென்றது.
இதனால் சேரியந்தல் ஏரியும் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் அதன் அருகில் அய்யப்பன் நகர் பகுதியிலும் மழை நீர் சூழ்ந்தது. 

இந்த பகுதியில் பெரும்பாலான வீடுகள் மழை நீரால் பாதி அளவிற்கு மூழ்கியே காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

மேலும் திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையிலும் மழை நீர் தேங்கியது. இதனால் போளூர் சாலை மற்றும் அவலூர்பேட்டை சாலையில் சென்ற பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. 

இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் வெள்ளநீரில் வாகனங்களை ஓட்டிச்சென்றனர். சில இடங்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடியது.

தகவலறிந்த வேங்கிக்கால் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்திதமிழ்செல்வன் தலைமையிலான ஊராட்சி அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர், வருவாய் துறையினர், போலீசார் போளூர் சாலை மற்றும் அவலூர்பேட்டை சாலைகளுக்கு வந்து சாலைகளில் தேங்கி இருந்த தண்ணீரை போர்க்கால நடவடிக்கையை போல் வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

பின்னர் அரசு அலுவலர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஏரிகளில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாய்களை அகலப்படுத்தி தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் தீவிரப் பணியில் ஈடுபட்டனர்.

கலெக்டர் ஆய்வு

இந்த பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் வந்து ஆய்வு செய்து, கால்வாய்களை அகலப்படுத்தி சாலையில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகளை பார்வையிட்டார். 

ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குனரும், கூடுதல் கலெக்டருமான பிரதாப், உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

Next Story