ஒட்டன்சத்திரத்தில் ரூ 5 கோடியில் காய்கறிகள் பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு
ஒட்டன்சத்திரத்தில் ரூ.5 கோடியில் காய்கறிகள் பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.
கீரனூர்:
பழனி அருகே தொப்பம்பட்டியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உழவர் விழா நடைபெற்றது. திண்டுக்கல் அட்மா திட்ட வேளாண்மை துணை இயக்குனர் விஜயராணி வரவேற்று பேசினார். தொப்பம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், ஒட்டன்சத்திரத்தில் ரூ.5 கோடி மதிப்பில் காய்கறிகள் பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு விவசாயிகளுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் பற்றி சம்பந்தப்பட்ட வேளாண்மை மற்றும் அதன் சார்ந்த துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார். பின்னர் அவர் 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் மற்றும் வேளாண் இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார். முடிவில் தொப்பம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் காளிமுத்து நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து வேளாண்துறை, கால்நடைத்துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டறிந்து பயனடைந்தனர்.
பால் குளிரூட்டும் மையம்
முன்னதாக மரிச்சிலம்பு ஊராட்சி பூலாம்பட்டி கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.54 லட்சம் மதிப்பிலான 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பால்குளிரூட்டும் மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் தும்பலப்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ராஜாமணி, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், தங்கராஜ், ஊராட்சி தலைவர்கள் சுப்பிரமணி(மரிச்சிலம்பு), ஈஸ்வரி ராமராஜ(தொப்பம்பட்டி)், வசந்தி கதிரேசன்(தும்பலப்பட்டி), பெரியசாமி(மேட்டுப்பட்டி), சந்திரா சரவணன் (புளியம்பட்டி), ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுலோச்சனா சோமு, மோகன்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story