கோவில் நிதி மூலம் கல்லூரி, கல்வி நிறுவனங்கள் கட்டப்படுவது கண்டிக்கத்தக்கது அர்ஜுன் சம்பத் பேட்டி


கோவில் நிதி மூலம்  கல்லூரி, கல்வி நிறுவனங்கள் கட்டப்படுவது கண்டிக்கத்தக்கது  அர்ஜுன் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 23 Oct 2021 7:58 PM IST (Updated: 23 Oct 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

கோவில் நிதி மூலம் கல்லூரி, கல்வி நிறுவனங்கள் கட்டப்படுவது கண்டிக்கத்தக்கது என்று இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறினார்.

கொடைக்கானல்:
கொடைக்கானல் நாயுடுபுரம் இ.சி.ஜி.ரோடு பகுதியில் கருப்பண்ணசாமி கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது. இந்த கோவிலின் உட்புறத்தில் பாரத அன்னை சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை திருப்பணி குழு தலைவர் குமரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். பாரத அன்னையின் சிலையை இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத், பாரதீய ஜனதா கட்சி திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். 
இதில் அ.தி.மு.க.நகர செயலாளரும், முன்னாள் நகரசபை தலைவருமான ஸ்ரீதர், பெரிய மாரியம்மன் கோவில் தலைவர் முரளி, இந்து மக்கள் கட்சியினர், பாரதீய ஜனதா கட்சியினர் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
 கண்டிக்கத்தக்கது
இதைத்தொடர்ந்து அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள கோவில்களில் நகை மதிப்பீட்டாளர் பதவிகளுக்கு பிற மதத்தினரை நியமனம் செய்தது அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது. இதனால் பக்தர்களின் மனம் புண்படுகிறது. இதனை கைவிடுவதுடன் புதிதாக நியமிக்கப்படும் பதவிகளில் இந்துக்களை மட்டுமே நியமிக்க வேண்டும். அதேபோல கோவில் நிதியினை கோவில் பணிகளுக்கு மட்டுமே செலவிட வேண்டும். கொளத்தூர், தூத்துக்குடி, நீலகிரி போன்ற பகுதிகளில் கோவில் நிதி மூலம் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் கட்டப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. கோவில் வருமானங்களை அரசு எடுக்கக்கூடாது. இதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதாக கூறிக் கொள்கிறது. இதில் பல்வேறு முறைகேடுகள், ஆள்கடத்தல் ஆகியவை நடந்துள்ளன. இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை எனவே இதுகுறித்து தானாக முன்வந்து நீதிமன்றம் விசாரணை செய்து வாக்குச்சீட்டு முறையை ஒழித்து மின்னணு வாக்குப்பதிவு முறையை கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story