கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கை


கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Oct 2021 9:22 PM IST (Updated: 23 Oct 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கை

பொள்ளாச்சி

கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கூறினார்.

மனமகிழ் மன்றங்கள்

பொள்ளாச்சியில் போலீசார் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு தனி, தனியாக மனமகிழ் மன்றங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா வெங்கடேசா காலனி போலீஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு துணை சூப்பிரண்டு தமிழ்மணி தலைமை தாங்கினார். 

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், மாணவ-மாணவிகளின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கவும், தவறான பாதையில் திசை மாறாமல் இருக்கவும் மனமகிழ் மன்றங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. 

இவற்றிற்கு தேவையான புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதை மாணவ-மாணவிகள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். இதில் 100 பேருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

விழாவில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஞ்சா வழக்குகள்

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதை பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30 பேர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதை தவிர அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுவரைக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 10 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

 தமிழகத்தில் வேறு இல்லாத வகையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டு உள்ளது. தற்போது மாவட்டத்தில் 15 சதவீதம் போலீசார் பற்றாக்குறை உள்ளது. 

இதுகுறித்து டி.ஜி.பி.க்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 1 ½ மாதத்திற்குள் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story