கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவராக புவனேஸ்வரி பெருமாள் போட்டியின்றி தேர்வு


கள்ளக்குறிச்சி  மாவட்ட ஊராட்சி குழு தலைவராக புவனேஸ்வரி பெருமாள் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 23 Oct 2021 10:14 PM IST (Updated: 23 Oct 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவராக புவனேஸ்வரி பெருமாள், துணை தலைவராக வக்கீல் தங்கம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்


கள்ளக்குறிச்சி

மறைமுக தேர்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக கடந்த 6  மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 19 வார்டுகளையும் தி.மு.க. கைப்பற்றி வெற்றிவாகை சூடியது. இதில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கடந்த 20-ந் தேதி பதவியேற்றுக்கொண்டனர். 

 இதைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவிக்கான தேர்தல் காலை 10 மணிக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர், தேர்தல் நடத்தும் அலுவலரும் மகளிர் திட்ட இயக்குனருமான தேவநாதன், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் மணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

போட்டியின்றி தேர்வு

இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக 13-வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி பெருமாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து இவர் பதவியேற்றுக்கொண்டார். பின்னர் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் திருக்கோவிலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளரும், 7-வது வார்டு கவுன்சிலருமான வக்கீல் தங்கம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். 
தொடர்ந்து அவர் பதவியேற்றுக்கொண்டார்.

புதிதாக தேர்வுசெய்யப்பட்ட மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் மணி, தேர்தல் நடத்தும் அலுவலர் தேவநாதன் மற்றும் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்தினர். 

Next Story