குமாரபாளையத்தில் பரபரப்பு: ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி எந்திரத்தை உடைக்க முடியாததால் ரூ.11 லட்சம் தப்பியது
குமாரபாளையத்தில் பரபரப்பு ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி எந்திரத்தை உடைக்க முடியாததால் ரூ.11 லட்சம் தப்பியது
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. எந்திரத்தை உடைக்க முடியாததால் ரூ.11 லட்சம் தப்பியது.
கண்காணிப்பு கேமரா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள பள்ளிபாளையம் சாலை காந்திநகர் பகுதியில் ஒரு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்கு நேற்று முன்தினம் இரவு சில மர்மநபர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் மையத்துக்குள் சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவை கருப்பு மை பேப்பரால் ஒட்டினர். இதையடுத்து மினி வெல்டிங் எந்திரம் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றனர்.
ஆனால் சுமார் ½ மணி நேரம் முயற்சித்தும் அவர்களால் ஏ.டி.எம். எந்திரத்தை திறக்க முடியவில்லை. இதையடுத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை கொள்ளை முயற்சி நடந்திருப்பதை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து வங்கி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பணம் தப்பியது
பின்னர் அந்த வங்கி கிளை மேலாளர் உமேஷ் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இ்டத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கேமரா பரிசோதகர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
மர்மநபர்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.11 லட்சம் தப்பியதாக போலீஸ் மற்றும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story