போடியில் அதிக அளவில் மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் கல்லூரி பஸ்சுக்கு அபராதம்
போடியில் அதிக அளவில் மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் கல்லூரி பஸ்சுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
போடி:
போடி நகராட்சி அலுவலகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மாவட்ட கலெக்டர் முரளிதரன் அங்கு வந்தார். அப்போது போடி ஏலக்காய் விவசாய சங்க கல்லூரி பஸ், அதிக அளவில் மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்றதை கலெக்டர் பார்த்தார். உடனே அந்த பஸ்சை அவர், அலுவலர்கள் மூலம் தடுத்து நிறுத்தினார். பின்னர் பஸ்சில் கலெக்டர் முரளிதரன் ஏறி ஆய்வு செய்தார். அப்போது அந்த பஸ்சில் மாணவிகள் சிலர் முககவசம் அணியாமல் முண்டியடித்தபடி நின்றனர். மேலும் பஸ்சை ஓட்டிய வந்த டிரைவரும் முககவசம் அணியவில்லை.
இதையடுத்து கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாத தனியார் பஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி போடி டவுன் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ்சுக்கு ரூ.5000 அபராதம் விதித்தனர். மேலும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி கல்லூரி பஸ்சை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story