மனவர்கள் ஆர்ப்பாட்டம்


மனவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2021 11:26 PM IST (Updated: 23 Oct 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமேசுவரம்
இலங்கை  கடற்படையை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் எதிரே நேற்று அனைத்து மீனவர் கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த 18-ந் தேதி ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பலை வைத்து மோதவிட்டது. இதில் நாகை மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். மீனவரின் சாவுக்கு காரணமான இலங்கை கடற்படையை கண்டித்தும், இறந்துபோன மீனவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவும், மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வலியுறுத்தியும்,  இலங்கை சிறையில் உள்ள நாகப்பட்டினத்தை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்திற்கு விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேசூராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் என்.ஜே.போஸ், தேவதாஸ், எமரிட், சகாயம், மகத்துவம், தட்சிணாமூர்த்தி கிளாட்வின் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் மற்றும் மீனவ மகளிர் அணி நிர்வாகிகள் மோட்ச ராக்கினி, இருதய மேரி உள்ளிட்ட ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். 
விசைப்படகுகள்
ஆர்ப்பாட்டத்தின்போது மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசூராஜா கூறியதாவது:-  ரோந்துகப்பல் மோதி மீனவரை கொலை செய்த இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும். இறந்துபோன மீனவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார். 
அப்போது இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் மூழ்கி இறந்துபோன மீனவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மீனவர்களும் சிறிது நேரம் கண்களை மூடி மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் இலங்கை கடற்படையை கண்டிக்கும் விதமாக ராமேசுவரத்தில் நேற்று விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 700-க்கு அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

Next Story