அமராவதி அணை முழு கொள்ளளவை நெருங்குமா
அமராவதி அணையின் நீராதாரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை அதன் முழு கொள்ளளவை நெருங்குமா என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தளி
அமராவதி அணையின் நீராதாரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை அதன் முழு கொள்ளளவை நெருங்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
நீராதாரங்களில் மழை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. மழைக்காலங்களில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதைத்தொடர்ந்து அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக பாசனத்திற்குதண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதை ஆதாரமாகக்கொண்டு கரும்பு, தென்னை, வாழை, நெல் மற்றும் காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அத்துடன் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் அமராவதி அணை விளங்குகிறது.
இந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக மூணார், காந்தளூர், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீர் ஆதாரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழுகொள்ளளவை நெருங்கும் சூழல் உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிலவி வருகிறது. இதனால் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை உதவி பொறியாளர் பாபுசபரீஸ்வரன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
மேலும் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்இருப்பு 85 அடியை கடந்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். அதன் பின்பும் நீர்வரத்து குறையவில்லை என்றால் அணையில் உள்ள 9 கண்மதகுகள், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகின்ற ஷட்டர்கள் மற்றும் பிரதான கால்வாய் மூலமாக உபரிநீர் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடியாகும். நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 81.17 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணையின் நீராதாரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை அதன் முழு கொள்ளளவை நெருங்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
Related Tags :
Next Story