இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான புதுக்கோட்டை மீனவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்
இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான புதுக்கோட்டை மீனவர் உடல் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
கோட்டைப்பட்டினம்:
இலங்கை கடற்படை கப்பல் மோதல்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து சுரேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அதே பகுதியை சேர்ந்த ராஜ்கிரண் (வயது 30), சுகந்தன் (23), சேவியர் (32) ஆகிய 3 பேரும் மீன்டிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் படகில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை கப்பல், மீனவர்கள் சென்ற படகில் மோதியது.
இதில் விசைப்படகு கடலுக்குள் மூழ்கியது. இதனால் விசைப்படகில் இருந்த ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய பேரும் தண்ணீரில் தத்தளித்தனர்.
உண்ணாவிரத போராட்டம்
இதையடுத்து உடனடியாக இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சேவியர் மற்றும் சுகந்தன் ஆகிய 2 பேரை மட்டும் மீட்டு கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். ராஜ்கிரணை மட்டும் மீட்க முடியவில்லை. இந்நிலையில் அடுத்த நாள் ராஜ்கிரணின் உடல் இலங்கை கடல் பகுதியில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மீனவரின் உடலை தமிழகம் கொண்டுவர கோரி மீனவர்கள் இப்பகுதியில் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மீனவரின் உடல் ஒப்படைக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது.
உடல் ஒப்படைப்பு
அதைத்தொடர்ந்து கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று அதிகாலை 2 விசைப்படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் ராஜ்கிரணின் உடலை வாங்க கடலுக்கு சென்றனர். சர்வதேச எல்லையில் மீனவரின் உடலை இலங்கை கடற்படையினர், இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இந்திய கடலோர காவல்படையினர் மீனவரின் உடலை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்து மீனவர் உடல் விசைப்படகில் ஏற்றப்பட்டு மதியம் 1.30 மணிக்கு கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மீனவர் உடல் அடக்கம்
இதற்கிடையே மீனவரின் உடல் மீன்பிடித்துறைமுகத்திற்கு வருவதை அறிந்து மீனவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டிருந்தனர். படகில் இருந்து மீனவர்கள், ராஜ்கிரணின் உடலை இறக்கி கரைக்கு கொண்டு வந்ததை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.
இதையடுத்து அஞ்சலி செலுத்த மீனவர் உடல் அங்கு சிறிது நேரம் வைக்கப்பட்டது. இதையடுத்து ராஜ்கிரண் உடலுக்கு அவரது குடும்பத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
ரூ.10 லட்சம் நிவாரணம்
ராஜ்கிரண் உடலுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, மீன்வளத்துறை துணை இயக்குனர் ஷர்மிளா, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே ராஜ்கிரணின் பெற்றோரிடம் தமிழக அரசின் நிவாரண நிதியான ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் ரகுபதி வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர் திரளான பொதுமக்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மீனவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ராஜ்கிரண் உடலை பெற்றுக்கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்று கோட்டைப்பட்டினத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தின் அருகே உள்ள சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்தனர்.
மேலும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 2 மீனவர்களை சொந்த ஊருக்கு கொண்டுவருவதற்கு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story