917 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்


917 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 24 Oct 2021 12:25 AM IST (Updated: 24 Oct 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 6-வது கட்டமாக நேற்று 917 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் 6-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இந்த முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணி வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட 917 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில் கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமை, கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா 3-வது அலை தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஒரு லட்சம் பேர்

அதன்படி தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை முழு அளவில் செயல்படுத்தும் விதமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டதில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 528 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே அசைவ பிரியர்களின் வசதிக்காக தடுப்பூசி முகாம் சனிக்கிழமைகளில் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று (அதாவது நேற்று) நடக்கும் முகாம்களில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உடல் உபாதைகள்

இத்தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது. மது, மாமிசம் உண்டவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு எவ்விதமான உடல் உபாதைகளும் ஏற்பட வாய்ப்பில்லை. அதனால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா நோய் தொற்றில் இருந்து முற்றிலுமாக தங்களை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்றார்.
ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர்கள் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா, மாவட்ட மலேரியா அலுவலர் கெஜபதி, ஊராட்சி மன்ற தலைவர் ஜல்லி சரவணன், துணை தலைவர் லட்சுமி ராமலிங்கம், வர்த்தக சங்க தலைவர் சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story