கரூரில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


கரூரில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 24 Oct 2021 12:30 AM IST (Updated: 24 Oct 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் 618 இடங்களில் நடைபெற்ற மெகா முகாம்களில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கரூர், 
தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் சமீபத்தில் நடந்த முகாம்களில் பொதுமக்கள் வருகை குறைவாக இருந்தது. மேலும், அன்றைய தினங்களில் அசைவப்பிரியர்கள், மதுப்பிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டாமல் இருந்ததும், பொதுமக்களிடையே ஒருவித வதந்தி இருந்ததும் என தெரியவந்தது. இதனால் மெகா முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் 618 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இம்முகாம்கள் நடைபெற்றன. இதில், பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தினர்.
ஆன்லைனில் பதிவு
கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொளந்தாகவுண்டனூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி, ஆண்டான் கோவில் கிழக்கு அரசு உயர்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பள்ளப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அய்யம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்யும் பணியில் அந்தந்த மையங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 
நொய்யல்
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், குளத்துப்பாளையம், நொய்யல் அண்ணாநகர், சேமங்கி, நடையனூர் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி, ஆலமரத்துமேடு, திருக்காடுதுறை, இளங்கோ நகர், நொய்யல் பெரியார் ஈவேரா அரசு மேல்நிலைப்பள்ளி, தவிட்டுப்பாளையம், புன்னம்சத்திரம், நடுப்பாளையம், பசுபதிபாளையம், ஆலாம்பாளையம், மூலிமங்கலம், புதுகுறுக்குபாளையம், மசக்கவுண்டன் புதூர், காகிதபுரம், மூர்த்திபாளையம், கூலக்கவுண்டனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் அனிதா, சுதமதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் முகாமில் கலந்துகொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். முகாம்களை புகளூர் தாசில்தார் மதிவாணன் ஆய்வு செய்தார்.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை, காந்தியார் மண்டபம், விவசாய அலுவலகம், காந்தியார் தொடக்கப்பள்ளி, புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, வாங்கப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில் ஓலப்பாளையம், அய்யம்பாளையம், வேலாயுதம்பாளையம், வாங்கல் ஆகிய ஆரம்ப சுகாதார மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்தினர். இதில் 2-வது தவணை தடுப்பூசியை ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று செலுத்திக்கொண்டனர்.
தோகைமலை
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளில் உள்ள 55 வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், கார்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் நீண்டவரிசையில் காத்து நின்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முகாம்களில் 50 ஆயிரத்து 113 பேருக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில், முதல் தவணை தடுப்பூசியை 9 ஆயிரத்து 38 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 41 ஆயிரத்து 75 பேரும் செலுத்திக்கொண்டனர். 
அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.

Next Story