தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Oct 2021 2:17 AM IST (Updated: 24 Oct 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

பழுதான மின்கம்பம் மாற்றப்பட்டது
சேலம் தேக்கம்பட்டி 12-வது வார்டு மாரியம்மன் கோவில் பின்புறம் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் நிலையில் மின்கம்பம் ஒன்று இருந்தது. இந்த மின்கம்பத்தால் ஆபத்து ஏற்படும் முன் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 22-ந் தேதி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கையில் இறங்கினர். அதாவது அந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைத்தனர். எனவே பழுதான மின்கம்பத்தை மாற்றிய அதிகாரிகளுக்கும், அதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-ஊர்மக்கள், தேக்கம்பட்டி, சேலம்.
திறக்கப்படாத நூலகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லாவியை அடுத்த பனமரத்துப்பட்டி கிராமத்தில் நூலகம் ஒன்று கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கிறது. இந்த நூலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும். அந்த நூலகத்தை திறக்க அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே மாணவ- மாணவிகள், இளைஞர்கள் நலன் கருதி அந்த நூலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள்,பனமரத்துப்பட்டி, கிருஷ்ணகிரி.
நோய் பரவும் அபாயம்
சேலம் இளம்பிள்ளை பெருமாகவுண்டம்பட்டி அசோக் நகர் 6-வது வார்டில் சாக்கடைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அந்த பகுதியில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் கழிவுநீரை அகற்ற எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. எனவே அந்த பகுதி மக்களின் நலன் கருதி தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்மக்கள், அசோக் நகர், சேலம்.

தர்மபுரி மாவட்டம் புரோக்கர் ஆபீஸ் பஸ் நிறுத்தம் பகுதியில்  சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும். மேலும் அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், தர்மபுரி.

சாலையில் தேங்கும் மழைநீர்
சேலம் பேர்லேண்ட்ஸ் கிரீன்வேஸ் ரோடு பகுதியில் சாலையில் மழைநீர் கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மழைநீரில் தத்தளித்தபடி செல்ல வேண்டிய உள்ளது. எனவே அந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ம.புகழ், பேர்லேண்ட்ஸ், சேலம்.

ஆபத்தான பள்ளிக்கட்டிடம் 
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் சந்திரப்பிள்ளைவலசு பஞ்சாயத்து பள்ளத்தாதனூரில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூட கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த கட்டிடத்தின் உட்புறத்தில் சிமெண்டு பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. வருகிற 1-ந் தேதி பள்ளிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கு முன்னதாக இந்த பள்ளிக்கூட கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் பள்ளிகள் திறந்த பிறகு மாணவ- மாணவிகள் மீது சிமெண்டு பூச்சுகள் விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான இந்த பள்ளிக்கூட கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -எம்.பழனிமுத்து, பள்ளத்தாதனூர், சேலம்.

சாலையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள்
சேலம் வலசையூர் மெயின் ரோட்டில் தாதம்பட்டி பிரிவு சாலையில் ஓரத்தில் உள்ள செடி, கொடிகள் சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் சாலையில் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. சில நேரங்களில் சாலையில் வாகனங்கள் ஒதுங்கும் போது அதில் இருப்பவர்கள் மீது செடி கொடிகள் பட்டு காயம் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், தாதம்பட்டி,சேலம்.

கழிப்பறை கட்டண விவரம் இல்லை
ஓசூர் பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பறை பயன்படுத்த ஆண்களுக்கு ரூ.5-ம் பெண்களுக்கு ரூ.10-ம்  வசூலிக்கின்றனர். இந்த  கட்டணத்தில் பொதுமக்கள் கழிப்பறை பயன்படுத்த சிரமப்படுகின்றனர். இதுதொடர்பான அறிவிப்பு பலகை அங்கு இல்லை. எனவே கழிப்பறைகளுக்கு மாநகராட்சி நிர்ணயித்துள்ள கட்டண விவரங்களை அங்கு எழுதி வைத்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், ஓசூர்.

தெருவிளக்கு வேண்டும்
சேலம் அம்மாபேட்டை 37-வது வார்டு காமராஜ் தெருவில் தெருவிளக்கு இல்லை. இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு அமைத்து கொடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், காமராஜ் தெரு, சேலம்.

ஏரியை ஆக்கிரமித்த ஆகாயதாமரை
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி மூக்கனேரியில் ஆகாய தாமரை அதிகமாக படர்ந்துள்ளது. இந்த ஆகாயதாமரைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமதாஸ், கன்னங்குறிச்சி, சேலம்.

குடிநீர் தொட்டி கட்டும் பணி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா வி.செட்டி அள்ளி பஞ்சாயத்தில் குடிநீர் தொட்டி கட்ட எம்செண்ட் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு மணல் குவித்து வைத்து 10 மாதங்கள் ஆகிகிறது. இதுவரை குடிநீர் தொட்டி கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன் இல்லை. குடிநீர் தொட்டி இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அங்கு குடிநீர் தொட்டியை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், வி.செட்டிஅள்ளி, தர்மபுரி.

சேலம் மாவட்டம் ஆண்டிபட்டி கிழக்கு வட்டத்தில் 4 நாட்களாக தண்ணீர் தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் இல்லாமல் அந்த பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை உடனே சீரமைத்து அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், ஆண்டிபட்டி, சேலம்.

குண்டும், குழியுமான சாலை
தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை அரிச்சந்திரன் கோவில் தெரு பகுதியில் சாலை பல ஆண்டுகளாகவே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மருத்துவ அவசரத்திற்கு கூட இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.

பஸ்சின் மேற்கூரையில் பயணம் 
தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியம் கெளாபாறை கிராமத்தில் இருந்து அரூர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. எனவே அந்த பகுதியில் இயக்கப்படும் பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. மாணவ- மாணவிகள் பஸ்சின் படிக்கட்டுகளில் பயணம் செய்கின்றனர். சிலர் ஒருபடி மேலே போய், பஸ்சின் மேற்கூரையிலும் பயணம் செய்கின்றனர். இந்த ஆபத்தான பயணம் குறித்து அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுத்து பஸ்சின் மேற்கூரையில் மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க அந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆறுமுகம்,கெளாபாறை, தர்மபுரி.

Next Story