37 குழந்தைகளுக்கு உதவித்தொகை
கொரோனா 2-வது அலையில் பெற்றோரில் ஒருவரை இழந்த 37 குழந்தைகளுக்கு உதவித்தொகையை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
நாகர்கோவில்,
கொரோனா 2-வது அலையில் பெற்றோரில் ஒருவரை இழந்த 37 குழந்தைகளுக்கு உதவித்தொகையை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
மெகா தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் 18 வயதை தாண்டிய அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குமரி மாவட்டத்தில் முதற்கட்ட தடுப்பூசி 10 லட்சத்து 40 ஆயிரத்து 454 பேருக்கும், 2-ம் கட்ட தடுப்பூசி 3 லட்சத்து 55 ஆயிரத்து 209 பேருக்கும் போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் பொது சுகாதார துறையின் கீழ் 6-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. நாகர்கோவில் மாநகரில் மட்டும் 105 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 555 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம்கள் மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நாகர்கோவில் மாநகரில் 52 வார்டுகளிலும் ஆட்டோ மூலம் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதாவது மருத்துவ குழுவினர் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
தங்க நாணயம்
இதற்கிடையே நாகராஜா கோவில் திடல் அருகே நடைபெற்ற நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாமுக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் முன்னிலை வகித்தார். இதில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளுக்கும் தனித்தனியாக 52 ஆட்டோக்களில் வீடு-வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடும் நபர்களில் அதிர்ஷ்டசாலியான 22 நபர்களுக்கு (ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தலா 2 நபர்கள், மாநகராட்சியில் 2 நபர்கள், மாவட்ட அளவில் 2 நபர்கள்) தலா 1 கிராம் தங்க நாணயம் 27-ந் தேதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் விற்பனையை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) மீனாட்சி, மாநகர நல அலுவலர் விஜயசந்திரன், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாநகர செயலாளர் மகேஷ், மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத்பசலியான், சிவராஜ், மாநகராட்சி தலைமை செவிலியர் சாந்தி, சதாசிவம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உதவித்தொகை
அதைத்தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா 2-வது அலையின்போது பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு 37 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கினார். அவர் பேசும் போது , “கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை ஊக்கப்படுத்தி வளர்க்க வேண்டும். படிப்பில் கவனம் செலுத்தும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
இதில் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மொத்தத்தில் ரூ 1.11 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டது.
கோ-ஆப்டெக்ஸ்
முன்னதாக அண்ணா பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள தமிழக அரசின் கோ -ஆப்டெக்சின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். அங்கு அவர் பேசும் போது, “கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத்தள்ளுபடி திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.2.51 கோடிக்கு துணிகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.6 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது”என்றார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை, திருநெல்வேலி மண்டல மேலாளர் முத்துக்குமார், சரக மேலாளர் ராமச்சந்திரன், குமரி கோ -ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் பத்மராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story