4 பிள்ளைகளை கொன்று ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தற்கொலை


4 பிள்ளைகளை கொன்று ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Oct 2021 3:03 AM IST (Updated: 24 Oct 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவி அருகே, கருப்பு பூஞ்சை நோய்க்கு மனைவி பலியான நிலையில் 4 பிள்ளைகளை கொன்று ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் நடந்து உள்ளது.

பெலகாவி: பெலகாவி அருகே, கருப்பு பூஞ்சை நோய்க்கு மனைவி பலியான நிலையில் 4 பிள்ளைகளை கொன்று ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் நடந்து உள்ளது.

கருப்பு பூஞ்சையால் சாவு

பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகா போரக்கல் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 46). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. இந்த தம்பதிக்கு சவுமியா (வயது 19), சுவேதா (16), சாக்‌ஷி (11), சுர்ஜன் (8) ஆகிய பிள்ளைகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ஜெயஸ்ரீ கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் பெலகாவி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

ஆனால் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த சிறிது நாட்களில் ஜெயஸ்ரீயை கருப்பு பூஞ்சை நோய் தாக்கியது. இதனால் கடும் உடல்நலக்குறைவுக்கு ஆளான அவர் பெலகாவி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்து விட்டார். இந்த நிலையில் ஜெயஸ்ரீ இறந்து போனதால் கோபால் மனம் உடைந்து காணப்பட்டார்.

கொலை-தற்கொலை

மேலும் தனது 4 பிள்ளைகளையும் எப்படி வளர்ப்பது என தெரியவில்லை என்று உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் கோபால் கூறி வந்து உள்ளார். இதனால் கோபாலுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும் மனைவியின் பிரிவை தாங்க முடியாத கோபால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

ஆனால் தானும் தற்கொலை செய்து கொண்டால் 4 பிள்ளைகளும் அனாதையாகிவிடுவார்கள் என்று கருதிய கோபால் 4 பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். 

அதன்படி நேற்று காலை சவுமியா, ஸ்வேதா, சாக்‌ஷி, சுர்ஜன் ஆகிய 4 பேருக்கும் தண்ணீரில் விஷத்தை கலந்து கோபால் கொடுத்து உள்ளார். அதை குடித்த சிறிது நேரத்தில் 4 பேரும் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் கோபால், தானும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

சோகம்

இந்த நிலையில் நேற்று மதியம் வரை யாரும் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கோபால் வீட்டிற்குள் சென்று பார்த்து உள்ளனர். அப்போது 5 பேரும் வாயில் நுரைதள்ளியபடி பிணமாக கிடந்து உள்ளனர். இதனை பார்த்து அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சங்கேஸ்வரா போலீசார் அங்கு சென்று 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மனைவி இறந்த துக்கம் தாளாமல் 4 பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று, தானும் விஷம் குடித்து கோபால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சங்கேஸ்வரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஒரே குடும்பத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெலகாவி மட்டுமின்றி கர்நாடகம் முழுவதும் பெரும் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.

Next Story