பெங்களூரு விமான நிலையத்தில் 3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்


பெங்களூரு விமான நிலையத்தில் 3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Oct 2021 3:05 AM IST (Updated: 24 Oct 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் கடத்த முயன்ற 3 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் கடத்த முயன்ற 3 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு தகவல்

பெங்களூருவில் சமீபகாலமாக போதைப்பொருட்கள் விற்பனை தலைதூக்கி உள்ளது. இதனை தடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார், போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

ஆனாலும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும், கடத்தப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருட்கள் பார்சல் மூலம் கடத்தப்படுவதாக போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள சரக்கு பெட்டகத்திற்கு வந்து இருந்த பார்சல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு அட்டை பெட்டியில் பெண்கள் அணியும் லவங்கா உடைகள் இருந்தன. அந்த லவங்கா உடைகளை அதிகாரிகள் பிரித்து பார்த்த போது அதில் போதைப்பொருட்கள் பொட்டலம், பொட்டலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

3 கிலோ போதைப்பொருள்

இதையடுத்து அந்த போதைப்பொருட்களை கைப்பற்றி அதிகாரிகள் எடை பார்த்த போது அது 3 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் அந்த போதைப்பொருட்களின் மதிப்பு பல கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த பாா்சல் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து இருந்தது. ஆனால் அந்த பார்சலை அனுப்பியவர் மற்றும் அந்த பார்சல் யாருக்கு அனுப்பப்பட்டது என்பது உடனடியாக தெரியவில்லை. அந்த 3 கிலோ போதைப்பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டனர். 

இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோல பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஜப்பானுக்கு கடத்த முயன்ற பழங்கால விஷ்ணு சாமி சிலையை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டனர். இதுதொடர்பாக ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story