ஆன்லைனில் விளையாடுவதற்கு வாலிபரிடம் பணம் அபகரித்தவர் கைது
ராதாபுரத்தில் ஆன்லைனில் விளையாடுவதற்கு வாலிபரிடம் பணம் அபகரித்தவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த சகாய ஜோசப் கிளிண்டன் என்ற வாலிபர் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி ஆன்லைனில் "பிரீ பயர்" என்ற விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஆன்லைன் மூலம் அடையாளம் தெரியாத நபர் சகாய ஜோசப் கிளிண்டனிடம் தொடர்பு கொண்டார்.
அந்த நபர், இந்த விளையாட்டுக்கு உரிய ஐ.டி. தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார். அதற்கு ரூ.22 ஆயிரம் செலுத்த வேண்டும் என கேட்டுள்ளார். பின்னர் சகாய ஜோசப் கிளிண்டன் ஆன்லைன் செயலி மூலம் அவருக்கு பணத்தை செலுத்தி உள்ளார். ஆனால் அவரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் எவ்வித பதிலும் அளிக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதுகுறித்து சகாய ஜோசப் கிளிண்டன் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவுப்படி மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு மதிவாணன் (சைபர் கிரைம் பொறுப்பு) மேற்பார்வையில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதில் பணத்தை வாங்கி ஏமாற்றியவர் சென்னை சித்தலபாக்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (24) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து ஏ.டி.எம். கார்டு, வங்கி பாஸ்புத்தகம், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த சைபர் கிரைம் போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பாராட்டினார். மேலும் இதுபோல் ஆன்லைன் விளையாட்டுக்காக அடையாளம் தெரியாத நபரிடம் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story