மொபட்டில் சென்ற தம்பதி பலி


மொபட்டில் சென்ற தம்பதி பலி
x
தினத்தந்தி 24 Oct 2021 3:09 AM IST (Updated: 24 Oct 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

மொபட்டில் சென்ற தம்பதி பரிதாபமாக இறந்தனர்.

விக்கிரமங்கலம்:

பலத்த காயங்களுடன் கிடந்தனர்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் மோகன்தாஸ்(வயது 35). இவரது மனைவி சுபலட்சுமி(26). மோகன்தாஸ் முத்துவாஞ்சேரி கிராமத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் தங்கள் கடைக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கணவன்-மனைவி இருவரும் ஒரு மொபட்டில் அரியலூர் சென்றனர். அங்கு மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் முத்துவாஞ்சேரி நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் முத்துவாஞ்சேரி ஓடையின் அருகே சாலையின் நடுவில் மோகன்தாசும், சுபலட்சுமியும் பலத்த காயங்களுடன் கிடந்தனர். மொபட்டும் கீழே விழுந்து கிடந்தது.
சாவு
அந்த வழியாக ெசன்றவர்கள் இதைக்கண்டு 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் டாக்டர்கள் இருவரையும் பரிசோதித்தபோது சுபலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் மோகன்தாசை மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மோகன்தாஸ் இறந்தார்.
இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விபத்து எப்படி நடந்தது?, அவர்கள் இருவரும் மொபட்டில் இருந்து தவறி விழுந்தார்களா? அல்லது மொபட் மீது ஏதேனும் வாகனம் மோதியதா? என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இறந்த தம்பதிக்கு அனுஸ்ரீ(5), ஹரிதா (9) என 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெற்றோரை இழந்த அந்த பெண் குழந்தைகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விபத்தில் தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story