தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 24 Oct 2021 3:10 AM IST (Updated: 24 Oct 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி கே.கே.நகர், திரு.வி.க. தெருவில் மிகவும் மோசமான பழுதடைந்த மின்கம்பம் மாற்றாமல் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதனை பார்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு உடனே புதிய மின்கம்பத்தை அமைத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், பணியை மேற்கொண்ட பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். 
பொதுமக்கள், திருச்சி. 

4 கிலோ மீட்டர் நடக்கும் மாணவர்கள்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் குரும்பாபாளையம் மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் மருவத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளி செல்லும் நேரத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகின்றன. இதனால் மாணவர்களுக்கு உடல் அசதிஏற்பட்டு அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. ஆதலால் உடனடியாக பள்ளி நேரத்திற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராயப்பன், மருவத்தூர், பெரம்பலூர்.

அடிக்கடி ஏற்படும் மின் நிறுத்தம் 
பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராமத்தில் உள்ள ராஜிவ் காந்தி நகரில் இரவு முதல் காலை வரை அடிக்கடி மின் நிறுத்தம் ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் குழந்தைகள் முதல் நோய்வாய்ப்பட்ட முதியோர்கள் வரை உறங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமல்லாமல் இரவு நேரத்தில் பாதுகாப்பான சூழல் இல்லை மற்றும் திருடர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், எளம்பலூர், பெரம்பலூர். 

சாலை வசதி ஏற்படுத்தப்படுமா? 
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வெள்ளப்பட்டி கிராமம், வேலாயுதம்பாளையத்தில் பள்ளி வளாகம், நூலக கட்டிடம், அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவை உள்ளன. இந்த நிலையில் இப்பகுதியில் முறையான சாலை, வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும்போது சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வேலாயுதம்பாளைம், கரூர்.

பழுதடைந்த மின்சாதன பெட்டி 
திருச்சி பீமநகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு சரியான முறையில் மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில், அப்பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மின்மாற்றியின் கீழே அமைக்கப்பட்டுள்ள மின்சாதன பெட்டி சேதம் அடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும்போது விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகர் செந்துறை சாலையில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவிகள் விடுதி முன்பு கழிவு பொருட்கள் சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருவதினால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  மேலும் மழை பெய்யும்போது அவற்றில் மழைநீர் தேங்கி அதன்மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அரியலூர். 

குளங்கள் பராமரிக்கப்படுமா?  
புதுக்கோட்டை நகரப்பகுதியில் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில், அக்காலத்தில் குளங்கள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளங்கள் காலப்போக்கில் பராமரிப்பு இன்றி குப்பைகள் கொட்டப்படும் இடங்களாகவும், பாசிப்படிந்தும் காணப்படுகிறது. மேலும் இந்த குளக்கரைகள் சேதம் அடைந்து உள்ளதால் மழை பெய்யும்போது மழைநீர் முழு அளவும் தேங்கி நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளங்களை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
காயத்திரி, புதுக்கோட்டை.

மின் நிறுத்தத்தால் பொதுமக்கள் அவதி 
திருச்சி கூனிபஜார் சவேரியார் கோவில் தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பகல் நேரத்தில் அடிக்கடி மின்நிறுத்தம் செய்யப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஆன்லைன் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் முன் அறிவிப்பு இன்றி நிறுத்தப்படும் மின்சார நிறுத்தத்தால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சாமு, திருச்சி. 

தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி கருமண்டபம், செல்வநகர் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைபெய்யும்போது மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளில் புகுந்து விடுகிறது. மேலும் சில இடங்களில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் ஆங்காங்கே தூர்ந்து போன நிலையில் உள்ளதால் 
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் அவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், செல்வநகர், திருச்சி. 

எரியாத மின் விளக்குகள் 
திருச்சி பிச்சாண்டார்கோவில் ஊராட்சி செல்லம்மாள் நகர், சிவராம் நகர் பகுதியிலிருந்து ரெயில்வே நடைபாதைக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி வழிப்பறி சம்பவங்கள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
விக்னேஷ்வரன், பிச்சாண்டார்கோவில், திருச்சி. 

சாலையில் பள்ளம் 
திருச்சி  அரிஸ்டோ ரவுண்டானா அருகே  திண்டுக்கல்- திருச்சி சாலையின் அடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் குழாயை சரிசெய்வதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாக மூடாமல் உள்ளதால் அப்பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி. 

சாலையில் திரியும் குதிரைகள் 
திருச்சி மாநகர் பகுதியில் ஆங்காங்கே குதிரைகள் சாலையில் சுற்றி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றன. மேலும் இந்த குதிரைகள் வாகனங்கள் செல்லும்போது சாலையை கடக்க முயலும்போது விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மணி, திருச்சி. 

குடிநீரில் கலக்கும் கழிவுநீர் 
திருச்சி  மாவட்டம், முசிறியில் இருந்து உப்பிலியபுரத்தை அடுத்த கோட்டப்பாளையத்திற்கு குழாய் மூலம் காவிரி குடிநீர் கொண்டு வரப்படுகிறது. பின்னர் கோட்டைப்பாளையத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் நீர்நிரப்பப்பட்டு பாலகிருஷ்ணம்பட்டி, உப்பிலியபுரம் பேரூராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கோட்டப்பாளையத்திற்கு வரும் குடிநீர் இணைப்பு பகுதியில், வடக்கு விஸ்வாம்பாள்சமுத்திரம்-கோட்டப்பாளையம் இடையே, மேம்பாலம் அடியில் உள்ள குடிநீர் குழாய் இணைப்பில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், முசிறி, திருச்சி. 


Next Story