பாளையங்கோட்டையில் பாரம்பரிய உணவு திருவிழா


பாளையங்கோட்டையில் பாரம்பரிய உணவு திருவிழா
x
தினத்தந்தி 24 Oct 2021 4:15 AM IST (Updated: 24 Oct 2021 4:15 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் பாரம்பரிய உணவு திருவிழாவை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

நெல்லை:
நெல்லை மாவட்ட சரிவிகித உணவு இயக்கம் சார்பில் சத்தான உணவு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய மற்றும் சரிவிகித உணவு திருவிழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் அருகே நேற்று நடந்தது.

கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, கண்காட்சி அரங்கை திறந்து வைத்து, பாரம்பரிய உணவு வகைகளை பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் தினை, கம்பு, சோளம், பாரம்பரிய அரிசி ஆகியவற்றில் செய்யப்பட்ட முறுக்கு, தினை லட்டு, கம்பு உப்புமா, சோளப் பனியாரம், ராகி பக்கோடா, அல்வா, பொங்கல் உள்ளிட்ட 50 வகைகளுக்கும் மேலான பாரம்பரிய உணவுவகைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனையும் செய்யப்பட்டது.

மேலும் பாரம்பரிய உணவு வகைகள் ஒவ்வொன்றையும் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து செய்முறை விளக்கமும் வைக்கப்பட்டு இருந்தது. மலைவாழ் மக்களான காணியின மக்கள் உற்பத்தி செய்யும் கிழங்கு வகைகள், தேன், அத்திபழம், கொட்டாம்புளி, மிளகு ஆகியவையும், இயற்கை உரத்தில் விளைவிக்கப்பட்ட உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், பாரம்பரிய நெல்விதைகள் ஆகியவையும் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டு இருந்தது. 

பாரம்பரிய உணவு செயல்முறை தொடர்பான யூடியூப் சேனல் சேவையையும் கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி, கல்லூரிகளில் சரிவிகித உணவு மன்றம் என்ற அமைப்பையும் தொடங்கி வைத்தார். 

இந்தியாவிலேயே சுகாதாரம், நவீனமயம், சரிவிகித உணவு ஆகியவற்றை சரியாக செயல்படுத்தி வருவதாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உணவு பாதுகாப்பு துறை மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை கலெக்டர் விஷ்ணு, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரவிச்சந்திரனிடம் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் விஷ்ணு கூறுகையில், பாரம்பரிய உணவுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது. நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சரிவிகித உணவு வளாகம் என்ற சான்றை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் உணவு பரிசோதனை வாகனம் தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் மட்டும்தான் இயங்குகிறது. அந்த வாகனம் நெல்லைக்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. உப்பு, இனிப்பு, கொழுப்பு ஆகியவற்றை குறைக்கும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக லோேகா வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன், சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன், பயிற்சி உதவி கலெக்டர் மகாலட்சுமி, வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திரபாண்டியன், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சசிதீபா  உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.

Next Story