குடிபோதையில் போலீஸ் வாகனத்தை தாறுமாறாக ஓட்டிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்


குடிபோதையில் போலீஸ் வாகனத்தை தாறுமாறாக ஓட்டிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 24 Oct 2021 2:28 PM IST (Updated: 24 Oct 2021 2:28 PM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் போலீஸ் வாகனத்தை தாறுமாறாக ஓட்டிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

சென்னை ஆயுதப்படை போலீஸ்காரரான சரவணன் என்பவர் வி.ஐ.பி. மற்றும் வி.வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பாக செல்லும் போலீஸ் வாகனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் மதுபோதையில் பாதுகாப்பு வாகனத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி வேகமாக சென்றார். 

அரும்பாக்கம் அருகே தாறுமாறாக சாலையில் ஓடிய பாதுகாப்பு வாகனம், அந்த வழியே சென்ற வாகனங்களை இடித்துவிட்டு சென்றது. அண்ணா வளைவு அருகே போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் அந்த காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்த 3 பேர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர். போலீஸ்காரர் சரவணன் மட்டும் சிக்கினார். 

அப்போது குடிபோதையில் இருந்த சரவணன், தன்னை மடக்கி பிடித்த பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தனது சட்டையை கழற்றி அரை நிர்வாணத்துடன் ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார், அதே வாகனத்தில் ஏற்றி அரும்பாக்கம் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். 

இந்தநிலையில் குடிபோதையில் பாதுகாப்பு வாகனத்தை தாறுமாறாக ஓட்டி ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் சரவணனை, ஆயுதப்படை துணை கமிஷனர் கோபால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

மேலும் காரில் இருந்து தப்பி ஓடிய அவரது நண்பர்கள் யார்? அவர்களும் போலீஸ்காரர்களா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story