குன்றத்தூர் அருகே கொன்று புதைக்கப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு


குன்றத்தூர் அருகே கொன்று புதைக்கப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு
x
தினத்தந்தி 24 Oct 2021 9:55 AM GMT (Updated: 24 Oct 2021 9:55 AM GMT)

குன்றத்தூர் அருகே கொன்று புதைக்கப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

பூந்தமல்லி,

குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 33). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று அவருடைய மனைவி, குன்றத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதுதொடர்பாக அவரது நண்பர்களிடம் விசாரிக்க முயன்றபோது, தலைமறைவான அவர்கள் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அப்போது தான் சிலம்பரசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து கோர்ட்டில் சரண் அடைந்த குன்றத்தூர், நத்தம் பகுதியை சேர்ந்த வருண் (19), விக்னேஷ் (21), பிரவீன்குமார் (21), கோவிந்தராஜ் (23) ஆகியோரை நேற்று போலீஸ் காவலில் எடுத்து குன்றத்தூர் போலீசார் விசாரித்தனர்.

இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான ரவி என்ற சிக்கா ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டார். அப்போது குன்றத்தூர், நத்தம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் சிலம்பரசனை கொலை செய்து புதைத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து சிலம்பரசனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய குன்றத்தூர் தாசில்தாரிடம் மனு அளித்தனர். அதன் பேரில் உதவி கமிஷனர்கள் பழனி, முத்துவேல் பாண்டி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாய பரத் ஆகியோர் தலைமையில் சுடுகாட்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

பின்னர் தாசில்தார் முன்னிலையில் கொலையாளிகள் அடையாளம் காட்ட, கொலை செய்யப்பட்ட சிலம்பரசன் புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி எடுத்து அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி என்ற சிக்கா ரவிச்சந்திரன். இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. கஞ்சா விற்பனையும் செய்து வருகிறார். இவருக்கு எதிராளியாக சிவா உள்ளார். இருவரும் கஞ்சா விற்பனை செய்து வருவதால் தொழில் போட்டியுடன், முன்விரோதம் இருந்து வந்ததது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் குன்றத்தூர் வந்து விட்டார்.

சிவாவும், சிலம்பரசனும் நண்பர்கள் என்பதால் சிலம்பரசன் மூலமாக ரவிச்சந்திரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த ரவிச்சந்திரன், சிலம்பரசனை நைசாக பேசி அழைத்து சென்று சுடுகாட்டில் வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு பின்னர் அவரது உடலை அங்கு ஏற்கனவே புதைக்கப்பட்டிருந்த உடலின் மேல் இருந்த மணல்மேட்டை அகற்றிவிட்டு சிலம்பரசன் உடலை அதில் புதைத்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது.

மேலும் சிலம்பரசன் கோவில் செல்வதற்காக மாலை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொழில் போட்டி காரணமாக முன் விரோதத்தில் சிலம்பரசனை தீர்த்து கட்டியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவரது கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிேறாம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

சிலம்பரசனின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட இடத்திலேயே செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். சிலம்பரசனின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

Next Story