கொட்டையூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து: ஊராட்சி மன்ற தலைவரை வெட்டிய வழக்கில் 5 பேர் கைது


கொட்டையூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து: ஊராட்சி மன்ற தலைவரை வெட்டிய வழக்கில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 24 Oct 2021 5:25 PM IST (Updated: 24 Oct 2021 5:25 PM IST)
t-max-icont-min-icon

கொட்டையூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து ஊராட்சி மன்ற தலைவரை வெட்டிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொழில் போட்டியால் கொலை செய்ய முயன்றதாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் கிராமம் பாடசாலை தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 38). அ.தி.மு.க. நிர்வாகியான இவர், கொட்டையூர் ஊராட்சி மன்றத் தலைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதியன்று பஞ்சாயத்து அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்திற்குள் நுழைந்து யுவராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதைக்கண்ட அங்கிருந்த கிராம மக்கள் உடனடியாக உயிருக்கு போராடிய யுவராஜை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்களை கைது செய்ய கோரி கொட்டையூர் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் 2 நாட்களாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது சம்பந்தமாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோ என 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவரை வெட்டிய வழக்கில் திருவள்ளூரை அடுத்த கொட்டையூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முருகன் (வயது 30), மப்பேடு சமத்துவபுரம் எழுத்தர் தெருவை சேர்ந்த நாகராஜ் (22), திருவள்ளூர் அடுத்த நரசிங்கமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அஜித்குமார் (23), காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பெரிய வளர்புரத்தை சேர்ந்த ஞான பிரசாந்த் (20), சின்ன வளர்புரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த மற்றொரு யுவராஜ் (வயது 25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில் முக்கிய குற்றவாளியான முருகன் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

ஊராட்சி மன்ற தலைவராக நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் யுவராஜ் கொட்டையூர் பகுதியிலுள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் இரும்பு கழிவுகளை எடுப்பது, தனியார் கம்பெனிகளுக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தும் காண்ட்ராக்ட் எடுப்பதை அவரே எடுத்து வந்தார்.

இதனால் நாங்கள் வேலையில்லாமல் அவதிப்பட்டு வந்தால், இதுகுறித்து அவரிடம் எங்களுக்கும் தனியார் கம்பெனியில் இரும்பு கழிவுகளை எடுக்கவும், ஆட்களை வேலையில் சேர்க்கவும் காண்ட்ராக்ட் கொடுக்க கேட்டபோது, அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இந்த தொழில் போட்டி காரணமாக ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரை கொலை செய்ய முடிவு செய்து கடந்த 20-ந்தேதி பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் புகுந்து யுவராஜை சரமாரியாக வெட்டினோம்

இவ்வாறு அவர்கள் அந்த வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மப்பேடு போலீசார் கைது செய்யப்பட்ட மேற்கண்ட 5 பேரிடமிருந்து, கொலை முயற்சிக்கு பயன்படுத்திய 3 கத்திகளையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் வெகுவாக பாராட்டினார்.

Next Story