மயில், வண்ணத்துப்பூச்சி அலங்காரத்தில் செடிகள் நடவு


மயில், வண்ணத்துப்பூச்சி அலங்காரத்தில் செடிகள் நடவு
x
தினத்தந்தி 24 Oct 2021 7:33 PM IST (Updated: 24 Oct 2021 7:33 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர மயில், வண்ணத்துப்பூச்சி அலங்காரத்தில் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.

ஊட்டி

ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர மயில், வண்ணத்துப்பூச்சி அலங்காரத்தில் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.

2-வது சீசன்

நீலகிரியில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுகிறது. தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனையொட்டி மலர் மாடத்தில் 12 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். பெரணி இல்லம் அருகே 2 ஆயிரம் பூந்தொட்டிகளை கொண்டு வட்ட வடிவில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

பராமரிப்பு பணிகள்

இதற்கிடையில் தொடர் மழை பெய்ததால் செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டது. இதனால் அந்த அலங்காரம் அகற்றப்பட்டது. இது தவிர பூங்கா நுழைவுவாயிலில் இருபுறமும் மேரிகோல்டு செடிகளில் மலர்கள்
பூத்துக்குலுங்கின. ஆனால் தொடர் மழை காரணமாக மலர்களில் தண்ணீர் தேங்கியதால், அந்த செடிகள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காரணமாக புல்வெளிகள் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் தற்போது பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 

அலங்காரங்கள்

இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவர இத்தாலியன் பூங்கா அருகே உள்ள இலை பூங்காவில் ஐரிஸ் ரக செடிகளை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மயில், வண்ணத்துப்பூச்சி, இதய வடிவில் செடிகள் நடவு செய்யப்படுகிறது. பச்சை, நீல நிறத்தில் உள்ள செடிகளை நடவு செய்து வருகின்றனர். அங்கு 10 ஆயிரம் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இத்தாலியன் பூங்காவில் வளர்ந்த அலங்கார செடிகளை அழகாக வெட்டி ஒருவர் சைக்கிளை ஓட்டி செல்வது போல 3 வடிவங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, மரங்களுக்கு அடியில் மலர் செடிகள் போதிய அளவு வளராது. இதனால் இலை பூங்காவை பயன்படுத்தும் வகையில் இலை செடிகளை கொண்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story