தேயிலை தோட்டங்களில் உரமிடும் பணி மும்முரம்
கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டங்களில் உரமிடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டங்களில் உரமிடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தேயிலை விவசாயம்
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்து வருமானம் ஈட்டுகின்றனர். மேலும் தொழிற்சாலைகளில் பச்சை தேயிலையை கொண்டு தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது.
களைச்செடிகள் அகற்றம்
இந்தநிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேயிலை தோட்டங்களில் ஈரப்பதம் காணப்படுகிறது. மேலும் களைச்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.
இதனால் கடந்த வாரம் முதல் விவசாயிகள் தோட்டத்தில் வளர்ந்திருந்த களைச்செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தற்போது யூரியா பேஸ் மற்றும் பொட்டாசியம் கலந்த உரங்களை தங்களது தேயிலை தோட்டங்களில் இட்டு வருகின்றனர். இந்த பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஏக்கருக்கு 200 கிலோ உரம்
இதுகுறித்து கோத்தகிரி பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
கோத்தகிரி பகுதியில் போதுமான மழை பெய்துள்ளதால் மண்ணில் ஈரப்பதம் உள்ளது. இதுவே தேயிலை தோட்டத்திற்கு உரமிட ஏற்ற தருணம் ஆகும்.
எனவே யூரியா பேஸ் மற்றும் பொட்டாசியம் கலந்த உரத்தை தோட்டத்தில் இட்டு வருகிறோம். ஒரு ஏக்கருக்கு 200 கிலோ கலவை உரம் தேவைப்படுகிறது. உரம் இடுவதால் பச்சை தேயிலை மகசூல் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story