திருவண்ணாமலையில் கும்பன் ஏரி உடைந்து வயல்களுக்குள் வெள்ளம்புகுந்தது


திருவண்ணாமலையில் கும்பன் ஏரி உடைந்து வயல்களுக்குள் வெள்ளம்புகுந்தது
x
தினத்தந்தி 24 Oct 2021 7:44 PM IST (Updated: 24 Oct 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக சோ. கீழ்நாச்சிப்பட்டு கும்பன் ஏரி உடைந்ததால் வயல்களுக்குள் வெள்ளம் புகுந்தது. சீரமைப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக சோ. கீழ்நாச்சிப்பட்டு கும்பன் ஏரி உடைந்ததால் வயல்களுக்குள் வெள்ளம் புகுந்தது. சீரமைப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

கும்பன் ஏரி

திருவண்ணாமலையில் கடந்த 2 தினங்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவண்ணாமலையில் பல்வேறு ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. 
இந்த நிலையில் நேற்று காலை திருவண்ணாமலை அருகே சோ.கீழ்நாச்சிப்பட்டு அருகில் உள்ள கும்பன் ஏரிக்கு நீர்வரத்து அதிகம் ஏற்பட்டதன் காரணமாக ஏரியின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியிலிருந்து பெருக்கெடுத்த வெள்ளம்போல் திரண்டு ஏரியின் அருகில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலங்களில் சூழ்ந்தது. அருகில் வசித்து வந்த 10 இருளர் குடும்பத்தினர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டனர்.

 அவர்களை வருவாய்த்துறையினர் மீட்டு அருகில் உள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைத்தனர். மேலும்  வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர், காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஏரியில் ஏற்பட்ட உடைப்பை சீரமைப்பு மற்றும் உபரிநீர் வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

அமைச்சர் ஆய்வு

அப்போது பொக்லைன் எந்திரங்கள் மூலம் கால்வாய்கள் அகலப்படுத்தப்பட்டு உபரிநீர் வெளியேற தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வெள்ளநீர் அருகில் உள்ள தெருகளின் பாதையில் தேங்கியதால் பொதுமக்கள் அவ்வழியாக நடந்து வர சிரமப்பட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் வந்து ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டார். 

அப்போது கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான பிரதாப், உதவி திட்ட இயக்குனர் லட்சுமிநரசிம்மன், வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் மற்றும் அலுவலர் உடனிருந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

சேதம் எதுவும் ஏற்படவில்லை

திருவண்ணாமலையில் கடந்த 2 தினங்களாக எதிர்பாராத வகையில் இரவு நேரத்திலே பெய்த கனமழையின் காரணத்தினால் திருவண்ணாமலையில் சுற்றி இருக்கின்ற அனைத்து ஏரியும் நிரம்பி உள்ளது. ேமலும் உடைகின்ற தருவாயில் உள்ள சில ஏரிகளும், கொள்ளளவு அதிகமான காரணத்தினால் சில ஏரிகளில் தண்ணீர் வழிந்து செல்லும் சூழ்நிலையும் உள்ளது. குறிப்பாக ஆடையூர் ஏரி, வேங்கிக்கால் ஏரி, வெங்காய வேலூர் ஏரி, கீழ்நாத்தூர் ஏரிக்கு மொத்த தண்ணீரும் வந்து துரிஞ்சலாறுக்கு செல்கின்ற வழியிலே சில இடங்களில் தடுப்புகள் உள்ளது. இந்த தடுப்புகளில் உள்ள அடைப்புகள் எல்லாம் அப்புறப்படுத்த வேண்டுமென்று கலெக்டரின் ஆணையை ஏற்று பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்கள் இந்த பணியில் ஈடுப்பட்டு பணியாற்றி வருகின்றனர். 

நெடுஞ்சாலை துறை மூலமாக கிட்டத்தட்ட 20 பொக்லைன் எந்திரங்களை கொண்டு அடைப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் இதுபோன்ற பெரும் மழை பெய்து இருக்கிறது. அடுத்து மழைக்காலம் வருகிறது. மழைகாலத்தில் மக்களுக்கு எந்த ஒரு சேதாரமும் ஏற்படாமல், வீடுகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் முதல்- அமைச்சர் ஆணையை ஏற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதிலே மாவட்ட நிர்வாகம் ஈடுப்பட்டு இருக்கிறது.
 
அதன் அடிப்படையில் நானும், மாவட்ட நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி கொண்டிருக்கிறேன். விரைவில் தண்ணீர் செல்லும் பாதையை அகலப்படுத்தி உபரி நீர் துரிஞ்சலாறுக்கு சென்று கலக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை வெள்ள சேதம் எதுவும் ஏற்படவில்லை. வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story