சாலையோர தடுப்பு சுவரில் மோதிய சரக்கு லாரி
முதுமலையில் சாலையோர தடுப்பு சுவரில் சரக்கு லாரி மோதியது. இதனால் 3 மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்
முதுமலையில் சாலையோர தடுப்பு சுவரில் சரக்கு லாரி மோதியது. இதனால் 3 மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தடுப்பு சுவரில் லாரி மோதியது
கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு சரக்கு லாரி ஒன்று சென்றது.
முதுமலை கார்குடியில் ஒரு வளைவில் உள்ள பாலத்தில் சென்றபோது, திடீரென சாலையோர தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக லாரி மோதியது. இதனால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. மேலும் லாரியின் முன்பக்க சக்கரம் அந்தரத்தில் தொங்கியவாறு பாலத்தின் நடுவில் நின்றது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் கர்நாடகா, கூடலூர் மற்றும் கேரளாவுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மழையும் பெய்தது. இருப்பினும் பாலத்தின் ஒருபுறம் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் இயக்கப்பட்டது.
ஆனால் கனரக வாகனங்களான சரக்கு லாரிகள், பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் நின்றிருந்தது. இதனால் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் தவித்தனர்.
அகலப்படுத்த வேண்டும்
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது;-
கூடலூரில் இருந்து முதுமலை வழியாக கர்நாடகாவுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் பாலங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளது. மேலும் தடுப்பு சுவர்களும் இல்லாமல் இருக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
மேலும் பாலங்கள் மிகவும் குறுகலாக உள்ளதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து சிரமமின்றி நடைபெற பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது .ஆனால் சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story