தென் தமிழகத்தில் வேளாண் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது புதுடெல்லி வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவர் அங்கமுத்து தகவல்


தென் தமிழகத்தில் வேளாண் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது  புதுடெல்லி வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவர் அங்கமுத்து தகவல்
x
தினத்தந்தி 24 Oct 2021 8:07 PM IST (Updated: 24 Oct 2021 8:07 PM IST)
t-max-icont-min-icon

தென் தமிழகத்தில் வேளாண் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்று புதுடெல்லி வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவர் அங்கமுத்து கூறினார்

தூத்துக்குடி:
தென் தமிழகத்தில் வேளாண் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்று புதுடெல்லி வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவர் அங்கமுத்து கூறினார்.
கலந்துரையாடல் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வேளாண் ஏற்றுமதியை துரிதப்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்குமான ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் இறைவன் அருட்கனி அய்யநாதன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக புதுடெல்லி வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவர் அங்கமுத்து, வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு மையம் அசோக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
ஏற்றுமதிக்கு வாய்ப்பு
நிகழ்ச்சியில் டெல்லி வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவர் அங்கமுத்து முளைகட்டிய சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட லட்டு வகைகளை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது, "தென் தமிழ்நாட்டில் பலவகைப்பட்ட வேளாண் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏற்றுமதியாளர்கள் தேவைக்கு ஏற்ப பொருட்களை தேர்வு செய்து தரமாக உற்பத்தி செய்ய வேண்டும். ஏற்றுமதியாகும் தங்கள் வேளாண் பொருட்களுக்கு தரம், தர நிர்ணயம், ஆய்வுக்கூட வசதிகள், ஏற்றுமதியாளர்களுக்கான பயிற்சிகள் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் நிதி வழங்கி உறுதுணையாக செயல்படும்’ என்று கூறினார்.
பனை ஆராய்ச்சி
நிகழ்ச்சியில் வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் பேசும் போது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வேளாண் வணிகத்தில் ஈடுபட்டு உள்ள அனைத்து பங்குதாரர்களும் ஏற்றுமதி சந்தைவாய்ப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள், ஏற்றுமதி தர நிர்ணயங்களை பற்றி அறிந்து கொள்வது அவசியம். முருங்கை மற்றும் பனை சார்ந்த பொருட்களுக்கு தர நிர்ணயம் முக்கியமானது. தென்னிந்தியாவிலேயே பனை மற்றும் பனை சார்ந்த பொருட்களை பற்றிய ஆராய்ச்சி, கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பாக நடந்து வருகிறது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் கோவை வேளாண் வணிக மேம்பாட்டு மைய இயக்குனர் சிவக்குமார், தமிழ்நாடு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய துணை பொதுமேலாளர் ரவீந்திரா, மண்டல பொறுப்பாளர் ஷோபனாகுமார், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோர்கள், மாவட்ட வேளாண்மை அதிகாரிகள், நபார்டு வங்கி அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

Next Story