முத்துப்பேட்டையில் இருந்து வெளிநாட்டுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீரை கடத்த முயற்சி 2 பேர் கைது


முத்துப்பேட்டையில் இருந்து வெளிநாட்டுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீரை கடத்த முயற்சி 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Oct 2021 10:21 PM IST (Updated: 24 Oct 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் இருந்து வெளிநாட்டுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீரை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்:-

திருவாரூரில் இருந்து வெளிநாட்டுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீரை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திமிங்கல உமிழ்நீர்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதிகளில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட திமிங்கலத்தின் உமிழ் நீர் விற்கப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூர் பகுதியில் இருந்து திமிங்கலத்தின் உமிழ்நீர் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தஞ்சை ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் இளகுமணன் மற்றும் திருவாரூர் மாவட்ட வனத்துறையினர் உப்பூருக்கு சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக ரூ.5 கோடி மதிப்பிலான 8 கிலோ எடை கொண்ட திமிங்கில உமிழ்நீரை 3 கட்டிகளாக மாற்றி பதுக்கி வைத்து இருந்ததை போலீசார் கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி

இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து திமிங்கல உமிழ்நீரை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த நிஜாமுதீன் (வயது52), ஜாகிர் உசேன் (54) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அதன் பின்னர் 2 பேரிடமும் குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாரும், வனத்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் இலங்கையில் இருந்து திமிங்கலத்தின் உமிழ்நீரை சிலர் கட்டிகளாக மாற்றி கடத்தி வந்து, முத்துப்பேட்டையில் விற்பனை செய்ததும், அவற்றை வெளிநாட்டுக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய முயற்சி நடந்ததும் தெரியவந்தது.

தொடரும் விசாரணை

இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாரும், வனத்துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி நடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story