வேளாண்மை அலுவலகத்தில் தீ விபத்து


வேளாண்மை அலுவலகத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 24 Oct 2021 5:28 PM GMT (Updated: 24 Oct 2021 5:28 PM GMT)

கடலூர் வேளாண்மை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

கடலூர், 

கடலூர் செம்மண்டலம் குண்டு சாலையில் வேளாண்மை உயிர் உர உற்பத்தி மைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றி எரிந்தது. சற்று நேரத்தில் தீ மள, மளவென அலுவலகம் முழுவதும் பரவி வேகமாக எரிய தொடங்கியது. இதை பார்த்த ஊழியர் ராஜசேகர் என்பவர், இது பற்றி வேளாண்மை அலுவலர் முகமது நிஜாமிற்கு தகவல் தெரிவித்தார்.
அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது அலுவலகம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் தகவல் அறிந்ததும் கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தீ மேலும் பரவாமல் நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.

ரூ.8 லட்சம் பொருட்கள் சேதம்

இருப்பினும் அலுவலகத்தில் இருந்த நாற்காலிகள், ஏ.சி., கம்ப்யூட்டர், பதிவேடுகள், மின்சாதன பொருட்கள், மரச் சாமான்கள் முழுவதும் தீயில் கருகி சேதமானது. இவற்றின் மொத்த சேத மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இது பற்றி முகமது நிஜாம் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இருப்பினும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் வேளாண்மை அலுவலகம் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story